சிறுவன் உயிரிழப்பு; காரணம் கேட்ட உறவினர் மீது தாக்குதல் - திருவண்ணாமலையில் பரபரப்பு
தங்களது குழந்தை இறப்புக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது தான் காரணம் என்று கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஜெய் பீம் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் வயது (28). இவருடைய மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியருக்கு தஷ்வந்த் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். கடந்த பத்தாம் தேதி இரவு சிறுவன் தஷ்வந்துக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் சிறுவனை தண்டராம்பட்டு மின்சார வாரியம் எதிரே உள்ள தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுவனை தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி 6 மணி அளவில் திடீரென சிறுவன் தஷ்வந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் சிறுவனின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்து உடலை அடக்கம் செய்தனர். அதனை தொடர்ந்து காலை சிறுவன் தஸ்வந்த் உறவினர்கள் தண்டராம்பட்டில் உள்ள தனியார் கிளினிக் சென்று தங்களது குழந்தைக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என உறவினர்கள் கேட்டுள்ளனர். அப்போது கிளினிக் ஊழியரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இந்த வாக்குவாதம் முற்றவே அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிறுவனின் உறவினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் தண்டராம்பட்டு தானிப்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது இது குறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் செல்வ விநாயகம் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காவல்துறையினரிடம் தங்களது குழந்தை இறப்புக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது தான் காரணம் என்று கூறினர். அத்துடன் சிகிச்சை குறித்து கேட்க வந்த உறவினரை தாக்கிய நபர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினிடம் புகார் மனு வழங்கினர். புகாரைப் பெற்றுக் கொண்ட ஆய்வாளர் செல்வ விநாயகம் உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக தண்டராம்பட்டு தானிப்பாடி செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

