பிரதமர் வீடு கட்டும் திட்ட விவகாரம்; ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரால் கூலித்தொழிலாளி தற்கொலை..!
பிரதமர் வீடு கட்டும் திட்ட விவகாரம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தகாத வார்த்தைகளால் பேசியதால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பள்ளிவர்த்தி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய குருவாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். எலக்ட்ரீசியன் கூலி தொழிலாளியான இவர், மனைவி ராதா மற்றும் தனது மகன்கள் திலீப், சபரி ஆகியோருடன் 19 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளார்.
இதனையடுத்து 15ஆம் தேதி கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஓவர்சியர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து பெரிய குருவாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பகுதியில் இருந்துள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றிய ஓவர்சியரிடம் பள்ளிவர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் மாலாவின் கணவர் செந்தில்குமார் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க ரூபாய் 5000 தன்னிடம் வாங்கியுள்ளதாக கார்த்திகேயன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாருக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் தேதி இரவு கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்த செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் கார்த்திகேயனை அவரது உறவினர்கள் முன்னிலையில் பேசியுள்ளார். பின்னர் செந்தில்குமாரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து செந்தில்குமார் மற்றொரு நபரிடம் ரூபாய் 5000 பணத்தை கொடுத்து கார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு வருமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கார்த்திகேயன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவி ராதா அந்த பணத்தை வாங்க மறுத்துள்ளார்.
தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன் கடந்த 19ஆம் தேதியன்று பெரிய குருவாடி சுடுகாடு அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ராதா மற்றும் உறவினர்கள் கார்த்திகேயனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது விக்கிரபாண்டியம் போலீசார் கார்த்திகேயனிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக வந்தபோது கார்த்திகேயன் மயக்க நிலையில் இருந்ததால் அவரது மனைவி ராதாவிடம் வாக்குமூலம் வாங்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு காரணம் பள்ளிவர்த்தி ஊராட்சி மன்றத் தலைவர் மாலாவின் கணவர் செந்தில்குமார் தான் என்றும், உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்றும், கைது செய்யும் வரை கார்த்திகேயனின் உடலை வாங்கப் போவதில்லை என்றும் மனைவி ராதா மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கார்த்திகேயனின் மனைவி ராதா அளித்த புகாரின் பேரில் விக்கிரபாண்டியம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் நன்னிலம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசு அதிகாரி லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், மீண்டும் அதே அரசு திட்டத்தில் தற்போது தற்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.