Crime: திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு - 3 வாலிபர்கள் கைது
திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்திய காட்டி பணம் பறித்த தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை பேகோபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் ஆதம். இவர் கடந்த 11-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள மணலூர்பேட்டை நெடுந்சாலையில் உள்ள ஒரு குடோன் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் மூன்று பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ஆதாமிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் மற்றும் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கு இருந்து தப்பித்து சென்றுவிட்டனர். உடனடியாக இதுகுறித்து திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆதம் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றபிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரிலும் நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவண்ணாமலை வேட்டவலம் செல்லும் நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று வாலிபர்கள் நின்றுகொண்டு இருந்தனர். அப்போது உடனடியாக காவல்துறையினர் மூன்று வாலிபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அந்த மூன்று வாலிபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த விசாரணையில் மூன்று வாலிபர்களும் வழிபறியில் ஈடுபடுவது தெரியவந்தது. மேலும் ஆதமிடம் இருந்து பணம் செல்போன் பறித்தது அவர்கள் தான் என்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களும் திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்த முரளி வயது (26), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் வயது ( 28), கம்மங் கொள்ளை தெருவை சேர்ந்த விஷ்ணுப்பிரியன் வயது (22) ஆகிய மூன்று வாலிபர்களும் வேலைக்கு செல்லாமல் வழிப்பறியை தொழிலாக செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இவர்கள் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு முன்னதாக அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மணலூர் பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில் அப்பகுதியில் அதிக கிராமங்கள் உள்ளது. அங்கு உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் திருவண்ணாமலைக்கு வரவேண்டும். மீண்டும் வீட்டிற்கு செல்வதற்கு இரவு நேரம் ஆகிவிடுகிறது. இதனை அறிந்த வழிபறி கொள்ளையர்கள் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் கஞ்சா போதையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து நகை , பணம் கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். அந்த பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.