பக்கத்து நில உரிமையாளரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி - அலறல் சத்தம் கேட்டு அருகே வந்த உறவினரும் உயிரிழந்த சோகம்
’’என் கண்ணில் மின்சாரம் பட்டபோது நான் அலறி அடித்து கொண்டு எழுந்து ஏழுமலையை தள்ளி விட்டு அலறினேன் அப்போது அவர் மீது மின்சார ஒயர் பட்டு அங்கேயே உயிரிழந்தார்’’

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலைக்கு (45) இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (26) என்பவர் படித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இருவரின் நிலமும் அருகருகே உள்ளதால் ஏழுமலை, சரண்ராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் சரண்ராஜ் வயலுக்கு அருகே உள்ள கொட்டையில் உறங்குவது வழக்கம். இதனை தெரிந்து கொண்ட ஏழுமலை, சரண்ராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவில் உறங்கி கொண்டிருந்த சரண்ராஜின் கண்ணில் மின்சார ஒயரை வைத்து ஏழுமை கொலை செய்ய முயற்சித்த நிலையில், ஷாக் அடித்து சரண்ராஜ் அலறியதில் ஏழுமலை கையில் வைத்திருந்த ஒயர் அவரின் கை மீதே பட்டு சம்பவ இடத்திலேயே ஏழுமலை உயிரிழந்தார். சரண்ராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது உறவினர் ரேணுகோபாலும் (33) மின்சார ஒயரை மிதித்த காரணத்தால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்ட சரண்ராஜ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கலசபாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சரண்ராஜ் கூறுகையில்:- நான் தினந்தோறும் என்னுடைய வீட்டில் தான் உறங்குவேன். இன்று ஒருநாள் மட்டும் நிலத்தில் உள்ள கொட்டகையில் இரவு தூங்கினேன். அப்போது என்னுடைய பக்கத்து நிலத்துக்காரர் ஏழுமலை முன்விரோத காரணமாக என்னை கொலை செய்ய முயற்சி செய்தார். எங்களுக்கும் பக்கத்து நிலத்துகாரர் ஏழுமலைக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நிலத்தகராறு ஏற்பட்டது இதனால் நிலத்தின் மீது வழக்கு உள்ளது. இதனால் ஏழுமலை அவரது நிலத்தில் விவசாயம் செய்யாத நிலையில் நாங்கள் மட்டும் எங்கள் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தோம்.
இந்த பொறாமையால் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். பக்கத்து நிலத்துகாரர் ஏழுமலை கொலை செய்ய மின்சார ஒயர் முலம் முயற்சி செய்தார். என் கண்ணில் மின்சாரம் பட்டபோது நான் அலறி அடித்து கொண்டு எழுந்து ஏழுமலையை தள்ளி விட்டு அலறினேன் அப்போது அவர் மீது மின்சார ஒயர் பட்டு அங்கேயே உயிரிழந்தார். மேலும் காப்பாத்த வந்த ரேணுகோபாலும் உயிரிழந்ததாக கூறினார்கள். நான் அங்கேயே மயக்கம் அடைந்து விட்டேன். என்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார். தூங்கிக்கொண்டு இருந்த நபரை மின்சாரம் கொண்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

