மகளுக்கு பாலியல் தொந்தரவு - ஜாமீனில் வெளியே வந்தவரை வெட்டிய தந்தை..!
செய்யாறு அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்து போக்சோவில் சிறைக்கு சென்று ஜாமினில் வெளிவந்த தனியார் பேருந்து ஓட்டுநரை மாணவியின் தந்தை சரமாரி வெட்டி படுகொலை செய்தார்.
செய்யார் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோவில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்த தனியார் பேருந்து ஓட்டுநரை மாணவியின் பெற்றோர் சரமாரி வெட்டி படுகொலை செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாண்டியன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் முருகன் வயது (27). செய்யார் பகுதியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவியை பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்துகொண்டு இருந்த போது மாணவியிடம் முருகன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியிடம் அவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் பதட்டம் அடைந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனிடையே மாணவியின் பெற்றோர்கள் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் முருகனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து சில தினங்களுக்கு (22.06.2022) அன்று முன் ஜாமீன் மூலமாக முருகன் வெளியே வந்தார். இந்நிலையில் இன்று காலையில் முருகன் வீட்டின் அருகே உள்ள சவுக்கு தோப்பிற்கு காலைக்கடனை முடிப்பதற்கு சென்றார். அப்போது பாதிப்புக்கு உள்ளான மாணவியின் தந்தை தணிகைமலை, அவருடைய மகன் சுரேஷ் மற்றும் உறவினர் வேல்முருகன் உள்ளிட்டோர் முருகனை பின்தொடர்ந்தது சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சென்று முருகனை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது படுகாயம் அடைந்த முருகன் கூச்சலிட்டவாறு சரிந்து கீழே விழுந்துள்ளார். முருகனின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் ஓடி வந்துள்ளனர். இவர்கள் ஓடி வருவதை கண்ட மாணவியின் தந்தை அண்ணன் மற்றும் உறவினர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரடிக்கொண்டிருந்த முருகனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தாக்குதல் செய்யப்பட்ட மூன்று நபரகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தி தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தலைமறைவான மாணவியின் பெற்றோரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்