Crime: டூவீலர் முதல் கொத்தமல்லி மூட்டை வரை.. சேலத்தில் அதிகரிக்கும் பரபர திருட்டு சம்பவங்கள்...
ஓமலூர் அதிமுக நகர செயலாளரின் வீட்டில் நிறுத்தியிருந்த புல்லட் மோட்டார் சைக்கிளையும் இரட்டை கொள்ளையர்களே திருடி சென்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரன். இவர் சேலத்தில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான யமஹா ஆர் 15 என்ற அதிவேகமான புதிய மோட்டார் பைக்கை வாங்கியுள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற இந்திரன் தனது அதிநவீன புதிய மோட்டார் பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது புதிய மோட்டார் பைக்கை காணவில்லை.
இதையடுத்து தனது மோட்டார் பைக் திருட்டு குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருடப்பட்ட தனது அதிவேக புதிய பைக்கை கண்டுபிடித்து கொடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து தீவட்டிப்பட்டி காவல்துறையினர், இந்திரன் வீட்டருகில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது இந்திரனின் மோட்டார் பைக்கை இரண்டு பேர் திருடிக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து அதிநவீன அதிவேக மோட்டார் பைக்கை திருடி சென்ற இரட்டை கொள்ளையர்களை தீவட்டிப்பட்டி காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதேபோன்று ஓமலூர் அதிமுக நகர செயலாளரின் வீட்டில் நிறுத்தியிருந்த புல்லட் மோட்டார் சைக்கிளையும் இரட்டை கொள்ளையர்களே திருடி சென்றனர்.
தொடர்ந்து இரட்டையர்களின் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால், இரட்டை கொள்ளையர்களை விரைவாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இரட்டை கொள்ளையர்கள் மோட்டார் பைக்கை திருடி செல்லும் சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோன்று, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வாழக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் இவர் வெள்ளாண்டிவலசு காந்தி சிலை அருகே சுமார் ஆறு ஆண்டுகளாக காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் கடைக்கு சேலத்தில் இருந்து மல்லித்தழை சுமார் பத்து மூட்டை வரவழைக்கப்பட்டது. இந்த நிலையில் இரவு 10 மணிக்கு கடையை சாத்திவிட்டு சத்தியராஜ் வீட்டுக்கு சென்று விடுகிறார். இந்த நிலையில் நள்ளிரவில் சத்தியராஜின் காய்கறி கடைக்கு வந்த மர்ம நபர் கடைக்கு வெளியே வைத்திருந்த மல்லித்தழை மூட்டை இரண்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது. எடப்பாடி பகுதியில் தொடர் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் எடப்பாடி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.