சேலத்தில் ஒரு `ஜெய் பீம்’: சாத்தான் குளத்தை நினைவூட்டும் கஸ்டடி கொலை.. மீண்டும் தலை தூக்குறதா போலீஸ் அராஜகம்!
சேலத்தில் தலித் மாற்றுத்திறனாளி ஒருவர் காவல்துறையின் கண்காணிப்பில் உயிரிழந்திருக்கும் வழக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சேலத்தில் தலித் மாற்றுத்திறனாளி ஒருவர் காவல்துறையின் கண்காணிப்பில் உயிரிழந்திருக்கும் வழக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 8 அன்று, சேலத்தில் தலித் மாற்றுத்திறனாளி தையற்காரரான பிரபாகரனின் வீட்டுக்குள் நுழைந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் அவரை அவரது மனைவி ஹம்சாலாவின் கண்ணெதிரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். வீட்டினுள் நுழைந்த காவல்துறையினர் மாற்றுத்திறனாளி பிரபாகரனையும் அவரது மனைவி ஹம்சாலாவையும் தகாத வார்த்தைகளால் தங்கள் குழந்தைகளின் கண்ணெதிரில் திட்டியதாகவும், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஹம்சாலா, The Federal என்ற ஆங்கில இணையதளத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், `வீட்டில் காவல்துறையினர் நுழைந்து எங்களைத் தாக்கியதால் என் கணவர் அழுததில், எங்கள் தெருவில் இருந்த பலரும் கூடி விட்டனர். அப்போதுதான் தாங்கள் காவல்துறையில் இருந்து வந்திருப்பதாகத் தெரிவித்தனர். திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை செய்வதற்காக எங்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். என் கணவர் மாற்றுத் திறனாளி என்பதால் அவரால் நடக்க முடியாது; அவரைத் தூக்கி அவர்கள் காரில் வைத்த போது, நானும் துணையாக சென்றேன்’ எனக் கூறியுள்ளார்.
அருகில் இருந்த கருப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதோடு, சிறிது நேரத்தில் அருகில் இருந்த காவல்துறை குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூறியுள்ள ஹம்சாலா, `குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு எங்களைக் கடுமையாக காவல்துறையினர் தாக்கினர்; காலின் கீழ் பாதத்தில் கடுமையாக அடித்தனர். அவர்கள் அடித்த அடியில், என் கால் விரலின் நகம் அடிபட்டு, ரத்தம் வழியத் தொடங்கியது. என் கணவரின் மார்பிலும், ஆணுறுப்பிலும் எட்டி மிதித்தனர்’ என்று கூறுகிறார்.
கடந்த ஜனவரி 11 அன்று, நீதிமன்ற மேஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்துவதற்கு முன்பு வரை காவல்துறை குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்ததாக இறந்தவரின் மனைவி ஹம்சாலா தெரிவித்துள்ளார். நீதிமன்ற மேஜிஸ்திரேட்டிடம் இதுகுறித்து ஹம்சாலா கூறுவதற்கு முன்பே, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் காவல்துறையினரே பதில் கூறியுள்ளனர். மேலும், மறுநாள் ஹம்சாலா சேலம் மத்திய சிறையிலும், பிரபாகரன் நாமக்கல் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் வைக்கப்பட்டிருந்த மறுநாள், பிரபாகரன் சிறை அதிகாரிகளிடம் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறியுள்ளார். மறுநாள் அவர் நாமக்கல் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த இரவில் அவர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை நடைபெற்று, அவரது உடல் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரபாகரனின் உறவினர் சக்திவேல் என்பவர் பிரபாகரனும், ஹம்சாலாவும் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்ற போது கருப்பூர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டுள்ளனர். அங்கு யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறப்பட்டதால், பிரபாகரனைக் காணவில்லை என வழக்குப்பதிவு செய்துள்ளார்.
செண்டமங்கலம் பகுதியில் வீடு ஒன்றில் சுமார் 20 சவரன் நகைகள் கடந்த டிசம்பர் மாதத்தின் போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட குமார் என்பவர் தனக்கு உதவி செய்தவர்கள் என்று வாக்குமூலமாகக் கொடுத்த பட்டியலில் பிரபாகரனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் அவரும் அவரது மனைவியும் செண்டமங்கலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். கைதான குமாரின் நண்பரான நடராஜன் என்பவர் ஹம்சாலாவின் உறவினர். தர்மபுரியைச் சேர்ந்த நடராஜனும், அவரது மனைவியும் இந்தத் திருட்டு வழக்கில் தொடர்புடையவர். அவர் இந்தத் தம்பதியிடம் கடந்த டிசம்பர் மாதத்தின் போது, 4 சவரன் நகை ஒன்றைக் கொடுத்து, அதனை அடமானம் வைத்துத் தருமாறு கேட்டுள்ளனர். நடராஜனின் குடும்பத்தின் பரிதாப நிலையைப் பார்த்து, அவருக்கு உதவி செய்யும் விதமாக, கடந்த டிசம்பர் 4 அன்று நகையை வாங்கி அடமானம் வைத்து பணம் தந்ததோடு, டிசம்பர் 16 அன்று நகையைத் திரும்ப மீட்டு, பரிவர்த்தனையை முடித்துக் கொண்டுள்ளனர். இது தற்போது மாற்றுத்திறனாளி பிரபாகரனுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
தலித் மாற்றுத்திறனாளியான பிரபாகரனின் மரணத்தைக் கண்டித்து அவரது உறவினர்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் முதலானோர் குரல் கொடுத்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தாங்குளத்தில் நிகழ்ந்த கஸ்டடி மரணங்களுக்கு இணையாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரபாகரனின் கஸ்டடி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, மறைந்த பிரபாகரனின் குடும்பத்தினருக்கு இழப்பீடாகத் தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து பேசியுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன், `நாமக்கல் மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லையைக் கடந்து, தங்கள் எல்லைக்கு வெளியில் விசாரணை நடத்தியுள்ளது காவல்துறை; உயிரிழந்த பிரபாகரனையும், அவரது மனைவி ஹம்சாலாவையும் கைது செய்யும் போது, காவல்துறையினர் சீருடை அணியவில்லை. காவல்துறையினர் இந்தக் கைதை சட்டவிரோதமாக செய்துள்ளனர்’ என்கிறார். தொடர்ந்து அவர், `சாத்தாங்குளம் விவகாரத்தைப் போலவே, இதிலும் நீதிமன்ற மேஜிஸ்திரேட் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை; மௌனம் காக்கிறார். அவரும், பிரபாகரனின் உடல்நலத்தைப் பரிசோதித்த அரசு மருத்துவரும் இந்தக் குற்றத்தில் பங்கு கொண்டவர்கள்’ எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் பிரேதப் பரிசோதனையில் எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
உயிரிழந்த மாற்றுத் திறனாளியின் மனைவி ஹம்சாலா இந்த விவகாரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். `எனக்கு தற்போது நடப்பது எதிர்காலத்தில் யாருக்கும் நடைபெறக் கூடாது. எனது இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் எப்படி சமாளிப்பேன் என்று தெரியவில்லை. அரசு எங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால் அது போதுமா? எங்கள் இழப்பை எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது’ என்று கண்ணீருடன் பேசுகிறார் ஹம்சாலா.
போலீசின் இந்த அராஜகப் போக்கு சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த தந்தை மகன் உயிரிழப்பை நினைவு படுத்துகிறது. சாத்தான் குளம் விவகாரம் எழுந்தபோது அனைத்து இடங்களிலும் போலீசார் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்பின்னர் போலீசார் சற்று கனிவாகவே பொதுமக்களிடமும் விசாரணைக் கைதிகளிடமும் நடந்து கொண்டதாக தெரிகிறது. ஆனால் தற்போது மீண்டும் ஒரு போலீஸ் கஸ்டடி கொலை போலீஸ் அராஜகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.