Crime: நடுக்கடலில் பீடி இலைகள் கடத்தல்; தமிழகம், இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது
தூத்துக்குடியில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தல் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் வண்ணம் கியூ பிரிவினர் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டும் வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இரண்டு விசைப்படகில் இருந்து பீடி இலை பண்டல்கள் இலங்கை படகில் கைமாற்றும் போது, இந்திய கடலோர காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர். படகில் கடத்தப்பட இருந்த பல லட்சம் மதிப்புள்ள சுமார் மூன்றரை டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது கியூ பிரிவு போலீசார் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து சுங்கத்துறை வசம் ஒப்படைத்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் ஆழ்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் கடலோர காவல்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, தூத்துக்குடியில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக 4 படகுகள் நின்று கொண்டு இருந்தன. இதனை கவனித்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்றனர். அங்கு 2 இந்திய படகுகளும், 2 இலங்கை படகுகளும் இருந்தன. இந்த படகுகளில் தூத்துக்குடியை சேர்ந்த 10 பேரும், இலங்கையை சேர்ந்த 6 பேரும் இருந்தனர். அதே போன்று படகுகளில் வெள்ளை நிற சாக்கு மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக கடலோர காவல்படையினர் அந்த படகுகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.
இதில் அந்த வெள்ளை நிறச் சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3.7 டன் பீடி இலை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த பீடி இலைகளை சட்டவிரோதமாக தூத்துக்குடி மீனவர்கள் இலங்கைக்கு கடத்துவதும், அதனை வாங்குவதற்காக இலங்கையை சேர்ந்தவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படையினர் 14 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 நாட்டுப்படகுகள், பீடி இலை மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படையினர் கைதான 14 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.
இலங்கையை சேர்ந்த கல்பட்டி பகுதியில் இருந்து ரனில்சமரா, உதராகசன், சகான் ஸ்டீவன், சஞ்சீவ, சுதேஷ் சஞ்சீவ, சங்கலப்பாஜீவன்தா எனவும் அவர்களுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகில் காட்வின், லெமிட்டன், ராபின் ,நிஷாந்த், சேவியர், கிங்ஸ்டன், வெர்னோ, கோல்வின், சசிகுமார், டார்வின் மீனவர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து உளவுப்பிரிவு போலீசார், சுங்கத்துறையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி சேர்ந்த 10 மீனவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கியூ பிரிவு போலீசார் பீடி இலை கடத்த வந்தார்களா? அல்லது போதைப் பொருள் எதுவும் கடத்த வந்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.