சிவகங்கை லாக்கப் மரணம்; மடப்புரத்தில் கடையடைப்பு.. மதுரையில் உடற்கூறாய்வு !
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அஜித்தின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வருகிறது.

சிவகங்கையில் உயிரிழந்த காவலாளி அஜீத் உயிரிழந்ததை அடுத்து விசாரணைக்காக அவரது குடும்பத்தினரை தி.மு.க., கொடிகட்டிய காரில் அழைத்துச் செல்லப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
காவல்நிலைய விசாரணையில் இளைஞர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த, மடப்புரம் பத்திரகாளி கோயில் உள்ளது. இந்த கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் அஜித் என்ற இளைஞர், காவலாளியாக பணி செய்தார். இந்நிலையில் கோயில் வெளியே நடைபெற்ற நகை திருட்டு தொடர்பான புகாரில், திருப்புவனம் காவல்நிலைத்திற்கு காவலாளி அஜீத் அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு நடைபெற்ற விசாரணையில் அஜித்திற்கு அதிகளவு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை முன்னேற்றம் இல்லாமல் அஜித் குமார் மரணமடைந்தார்.
உரிய நிவாரணம் வழங்கி - காவல்துறையினர் மீது நடவடிக்கை வேண்டும்
இதையடுத்து அஜித்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் நேற்று இரவு தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இன்று காலை முதல் மடப்புரம் கோயிலை சுற்றியுள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
பணியிடை மாற்றம் செய்த சிறப்பு காவலர்களை கைது செய்யவும், இறந்த அஜித்தின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரண வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மதுரையில் இளைஞரின் உடல் கூறாய்வு
இதனைத் தொடர்ந்து நீதிபதி விசாரணைக்காக அஜித்தின் குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்ட சூழலில், அவர்கள் தி.மு.க., கொடிகட்டிய காரில் அழைத்துச் செல்லப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் காவல்துறைனர் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அஜித்தின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வருகிறது.




















