சீர்காழியில் தொடரும் நிதி நிறுவன மோசடிகள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்
சீர்காழியில் நிதி நிறுவனம் நகை மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி காவல் நிலையம் அருகே தனியார் நிதி நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சீர்காழி பகுதியைச் சேர்ந்த தமிழ்மாறன் மற்றும் 14 பேர் நகை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அவ்வாறு நகை அடமானம் வைத்தவர்கள் தங்களது நகையை திரும்ப பெறுவதற்கு பணத்துடன் அங்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உங்களது பெயரில் நகை இல்லை எனவும், அடமானம் வைத்த தொகையோடு கூடுதலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்மாறன் இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் கடந்த ஜூன் மாதம் 21.8 கிராம் எடை கொண்ட தங்க நகையை ரூ.60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்ததாகவும் அந்த நகையை மீட்பதற்கு சென்று மணப்புரம் பைனான்ஸில் பணிபுரியும் ஊழியரிடம் கேட்டால் நகை உங்களது பெயரில் இல்லை எனவும், அடமானம் வைத்த தொகையோடு 18, 200 ரூபாய் கூடுதலாக தனலட்சுமி என்பவர் பெயரில் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 78 ஆயிரத்து 200 ரூபாய் கொடுத்தால் நகையை திருப்பி தருவதாக பணியில் இருப்பவர்கள் கூறுவதாகவும் இது குறித்து ஒரு விசாரணை செய்து எனது நகையை மீட்டு தரும்படி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், மணப்புரம் நிறுவனத்தின் கடலூரை சேர்ந்த உயர் அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு தாங்களும் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டுள்ளனர் என்றும், நகை தொடர்பாக எங்களுக்கு தெரியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என கூறி உள்ளார். மேலும் கடந்த வாரம் இதே காவல்நிலையம் அருகே செயல்பட்ட அமுதசுரபி நிதி நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டு அதில் முதலீடு செய்த ஏராளமானோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நிறுவனம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Shane Warne: ஷேன் வார்னும் 23 நம்பர் ஜெர்ஸியும்.. பிரிக்க முடியாத பந்தமும்.. பிறந்தநாள் ஸ்பெஷல்..
மேலும் இது போன்ற நிதி நிறுவனங்கள் வங்கிகளை காட்டிலும் கூடுதல் தொகை நகைகளுக்கு கடனாக தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவர்களின் கஷ்ட காலங்களை பயன்படுத்திக் கொண்டு இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை அரசு உரிய முறையில் கண்காணித்து, பொதுமக்கள் ஏமாறாத வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்கள் பாதிக்காத வகையில் அவர்களை காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.