கரூரை உலுக்கிய சம்பவம்.. பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டு வந்த மருத்துவர் ரஜினிகாந்த் கைது
கரூரில் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான மருத்துவர் ரஜினிகாந்தை தனிப்படை அமைத்து மூன்று நாட்களில் கைது செய்த போலீசார்.
கரூரில் தனது மகளுக்கு பிரபல மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை காசாளர் புகார் செய்துள்ளார். இதையடுத்து மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனை மேலாளர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அப்புகாரில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் மருத்துவர் ரஜினிகாந்த் நேற்று மாலை தனது மகளை தனது அறைக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
காசாளரின் மகளை மருத்துவமனை மேலாளர் மூலம் அழைத்துச் சென்று மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்த், மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலாளரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
கோவை சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வரும் சூழ்நிலையில் கரூர் பகுதியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேடப்பட்டு வந்த மருத்துவர் ரஜினிகாந்தை போலீசார் கைது
கரூரில் 17 வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த மருத்துவர் ரஜினிகாந்த் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் போலீசார். கரூரைச் சேர்ந்த எலும்பு முறிவு மருத்துவர் ரஜினிகாந்த். இவர் தனது மருத்துவமனையில் பணிபுரிந்த பெண்ணின் மகள் 17 வயது சிறுமிக்கு பாலியலில் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்துக்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்
இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தில் மருத்துவர் ரஜினிகாந்த் மற்றும் உடந்தையாக இருந்த மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டது. மேலாளர் சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், தனிப்படை போலீசார் மருத்துவர் ரஜினிகாந்தை நேற்று இரவு கைது செய்து கரூரில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.