Crime: சேலத்தில் ரூ.500 கூலி கொடுத்து ஆட்களை வைத்து கொள்ளை; நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல திருடர் கைது..!
இருவருக்கும் தலா ரூ. 500 கூலி கொடுத்து, கூட்டிச்சென்று ஓய்வு மின்வாரிய ஊழியர் சின்னசாமி வீட்டில் 69 பவுன் நகையை கொள்ளையடித்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சின்னசாமி (62). இவர், கடந்த 2 ஆம் தேதி தனது மனைவி ராஜாமணியுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். அடுத்தநாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 69 பவுன் நகை, ரூபாய் 80 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி சின்னசாமி, காரிப்பட்டி காவல்துறையினர் புகார் கொடுத்தார். கொள்ளை கும்பலை பிடிக்க, எஸ்பி ஸ்ரீ அபிநவ் தனிப்படைகளை அமைத்தார். எஸ்.ஐ.,க்கள் செந்தில்ராஜ் மோகன், சதீஸ்குமார், உதயகுமார் அடங்கிய தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரபல கொள்ளையன் மணிகண்டன் (33), அவரது கூட்டாளிகளான சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த அமிர்ஜான், செல்வராஜ், சாகுல்ஹமித் ஆகியோரை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் பணம், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கொள்ளையன் மணிகண்டன் மீது சேலம், திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி என தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கன்னங்குறிச்சியில் ஒரு கொலை வழக்கும் அவர் மீது இருக்கிறது. ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார்.
கடைசியாக ஈரோடு மாவட்டம் கோபி காவல்துறையினர் கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மணிகண்டன், கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர், மீண்டும் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு, தன்னுடன் அமிர்ஜான், சாகுல்ஹமித் ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார். அந்த இருவருக்கும் தலா ரூ. 500 கூலி கொடுத்து, கூட்டிச்சென்று ஓய்வு மின்வாரிய ஊழியர் சின்னசாமி வீட்டில் 69 பவுன் நகையை கொள்ளையடித்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இக்கொள்ளையை முடித்துக் கொண்டு, சேலத்தில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று நகை, பணத்தை கொடுத்து மணிகண்டன் உல்லாசமாக இருந்துள்ளார். எப்படியும் தன்னை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறிந்து பிடித்து விடுவார்கள் எனக்கருதி நகையில் பாதியை தான் குடியிருக்கும் வாடகை வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார். அதனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மீதியுள்ள நகையை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே கைதான மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும் காவல்துறையினர், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்