புதுச்சேரி: ஏரிக்கரையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கிய 2 ரவுடிகள் கைது
’’எதிரிகளை கொலை செய்யும் நோக்கில் வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், கத்திகள் பறிமுதல்’’
புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் உத்தரவின் பேரில் முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த உடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நைனார் மண்டபத்தை சேர்ந்த வினோத்குமார் (32), வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த திலிப் (32) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் வந்த காரை சோதனை நடத்தினர். அப்போது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் 2 பேரும் கடந்த ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி புதுச்சேரி 100 அடி ரோட்டில் ஜான்பால் நகரில் உள்ள ஒரு மனமகிழ்மன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட முத்தியால் பேட்டையை சேர்ந்த அன்புரஜினியின் ஆதரவாளர்களான இவர்கள் அவரது கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகளை பழிக்கு பழியாக கொலை செய்யும் நோக்கில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு கஞ்சா வருவதை தடுக்க போலிசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுத்தப்பட்டுள்ளனர் என கிழக்கு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கான அண்டை மாநில போலீஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இத்தகைய குற்றங்களை ஒடுக்கவும், முழு நேர கண்காணிப்புக்கு வசதியாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம்.
பொதுமக்களை அச்சுறுத்தும் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். காவல்துறையினர் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தால், எவ்வளவு பெரிய உயர் பொறுப்புகளில் இருந்தாலும் அவர்கள் மீது 100 சதவீதம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஏற்கெனவே உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : தொடர் கஞ்சா விற்பனை : சிறுவர்களே குறி.. சிக்கிய இளைஞர்கள் கைது..!