(Source: ECI/ABP News/ABP Majha)
தகராறை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை கொலை - தம்பதி உட்பட 5 பேர் கைது
’’ரமணியின் தம்பி ராஜா உள்பட சிலர் நடுரோட்டில் குடித்து விட்டு அநாகரிகமாக நடந்து கொண்டதை சதீஷ் உட்பட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டித்துள்ளனர்’’
புதுச்சேரி : வில்லியனூர் புதுமாப்பிள்ளை கொலையில் தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுவை வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த சங்கர் மகன் சதீஷ் என்ற மணிகண்டன் (வயது 28). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு கடந்த 4 மாதத்துக்கு முன் மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சதீசின் எதிர்வீட்டை சேர்ந்த சங்கர் (32), அவரது மனைவி ரமணி (28) ஆகியோர் தங்களது திருமணநாளை தெருவில் கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில் பங்கேற்ற ரமணியின் தம்பி ராஜா உள்பட சிலர் நடுரோட்டில் குடித்து விட்டு அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை சதீஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த ரமணியின் தம்பி ராஜா அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இரவில் மீண்டும் அங்கு வந்து தனது வீட்டின் முன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சதீசை ராஜா உள்ளிட்ட அவரது நண்பர்கள் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சதீஷின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்ய காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.
வில்லியனூரில் பரபரப்பை ஏற்படுத்திய சதீஷ் கொலை தொடர்பாக மூர்த்தி நகரை சேர்ந்த சங்கர் (35), அவரது மனைவி ரமணி (28), கோபாலன்கடை பகுதியை சேர்ந்த ரமணியின் தம்பி ராஜா (26), வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் என்ற தமிழ் (25), விழுப்புரம் மாவட்டம் தென்னல் பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற அசார் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 5 பேரையும் கொரோனா பரிசோதனைக்குப் பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: நீண்ட மீசை வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள்.... சொல்லியும் கேட்காததால் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரி..!