புதுச்சேரி: தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு... ரயிலை கவிழ்க்க சதியா?
புதுச்சேரியில் தண்டவாளத்தில் நேற்று இரவு குண்டு வெடித்தது. வெடிக்காத நிலையில் மற்றொரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. ரெயிலை கவிழ்க்க சதியா என போலீசார் விசாரணை.
புதுச்சேரியில் தண்டவாளத்தில் நேற்று இரவு குண்டு வெடித்தது. வெடிக்காத நிலையில் மற்றொரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. ரெயிலை கவிழ்க்க சதியா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
புதுவையில் ரவுடிகளுக்குள்ளான மோதலின்போது சர்வ சாதாரணமாக நாட்டு வெடிகுண்டுகளை வீசி பழிதீர்க்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பெரும்பாலான கொலைகள் இதுபோல் நடந்து இருப்பதே சாட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ரெயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய துகள்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு மற்றொரு நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு மணல், மரத்தூள் நிரப்பிய பிளாஸ்டிக் வாளியில் வைத்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அங்கு வேறு ஏதாவது நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்தநிலையில் அந்த இடத்தில் இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு விரைவு ரெயில் வந்தது. இதனால் போலீசார் தேடும் பணியை நிறுத்தினர். அந்த ரெயில் சம்பவ இடத்தை கடந்து சென்ற பிறகு மீண்டும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது அந்த இடத்தில் வேறு எந்த நாட்டு வெடிகுண்டும் சிக்கவில்லை.
சென்னை- புதுச்சேரி ரெயில் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் காராமணிக்குப்பம் ரெயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்துள்ளது. வெடிக்காத மற்றொரு குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த ரெயிலை குறி வைத்து அங்கு தண்டவாளத்தில் குண்டு பதுக்கி வைக்கப்பட்டதா அல்லது தண்டவாளத்தை தகர்க்கும் நோக்கத்தில் குண்டு வைக்கப்பட்டதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரவுடிகள் தங்கள் எதிரிகளை தீர்த்து கட்டுவதற்காக தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்து இருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் நாட்டு வெடிகுண்டுகளை சின்ன கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரிஷி என்ற ரிஷி குமார் (வயது 22), மற்றும் அவரது கூட்டாளிகளான பெரியார் நகரை சேர்ந்த கவுதமன் (23), அரவிந்த் (23) மற்றும் கவியரசன் (22) ஆகியோர் பதுக்கி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் ரஷி தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இன்று அதிகாலை அவர்களை போலீசார் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் வனத்துறை அலுவலகம் அருகே புதரில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கவுதம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வெடி குண்டு பதுக்கி வைத்தது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ரிஷிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் அவர் ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை விரும்பியதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்பிய ரிஷி அந்த பெண்ணின் அண்ணனிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணின் அண்ணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் அண்ணனை கொலை செய்ய ரிஷி திட்டமிட்டுள்ளார். இத்திட்டத்தை தனது கூட்டாளிகளிடம் தெரிவித்துள்ளார்.
அதனை அவர்களும் ஏற்று கொண்டு கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரெயில்வே தண்டவாள பகுதியில் 2 நாட்டு வெடிகுண்டுகளையும், வனத்துறை அலுவலக வளாக புதரில் 2 நாட்டு வெடிகுண்டுகளையும், கவுதம் வீட்டில் ஒரு நாட்டு வெடிகுண்டையும் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு தயாரிப்பில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட ரிஷி மீது ஏற்கனவே கொலை மற்றும் வெடிகுண்டு வழக்குகளும், மற்ற 3 பேர் மீது அடிதடி, கொலை முயற்சி வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.