ஆபாச யூ ட்யூபர் மதன் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!
வலைதளங்களில் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பப்ஜி மதன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
மதன் மற்றும் டாக்ஸிக் மதன் 18+ ஆகிய யூ-டியூப் சேனல்களில் லைவ் வீடியோ கேம்களின்போது தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்தவர் மதன். இவரது பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் மதனுக்கு எதிராக புகார்கள் குவிய, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு ஆஜாராகாமல், மதன் தலைமறைவாகியுள்ளார். VPN எனப்படும் IP முகவரிகள் மூலம் இருப்பிடத்தை கண்டறிய இயலாத VIRTUAL PRIVATE NETWORK-ஐ மதன் பயன்படுத்தி வந்தததால் அவரின் இருப்பிடத்தை கண்டறிந்து விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு மனுவினை மதன் தாக்கல் செய்துள்ளார்
பப்ஜி மதனை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்திய நிலையில், எப்போதும்போல வீடியோ கேமில் பங்கேற்று விளையாடினார் மதன். அப்போது, தன்னை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம், சிறு தவறு செய்தாலும் கைது நடவடிக்கை உறுதி என காவல்துறை நிறுவ முயற்சிப்பதாகவும், ஆனால் அது முடியாது எனவும் கூறினார் மதன். இந்நிலையில், தன்னுடன் விளையாடும் நிர்மல் என்பவர் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் மகன் என பப்ஜி மதன் கூறி வந்ததும் தெரியவந்துள்ளது. அதுகுறித்த பலமுறை லைவ் விளையாட்டின்போதே குறிப்பிட்டிருக்கும் மதன், தற்போதைய விவகாரத்தில் அவர் உதவி தேவையில்லை எனவும், தன் பிரச்சனையை தானே பார்த்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பப்ஜி மதன் ஆன்லைன் விளையாட்டின்போது ஆபாசமாக பேசியது மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது. 18 வயதிற்குட்பட்டோரை அதில் பயன்படுத்தியது போன்றவை தண்டனைக்குரிய குற்றம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் பப்ஜி மதன் மீது வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ள காவல்துறை, அவரது யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கவும் சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்
இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள மதன், தனக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் மூலம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது