தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 22 கோடி மோசடி.. தனியார் நிதி நிறுவனரின் உறவினர் வீட்டுக்கு சீல் வைப்பு
வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதிகளில் தனியார் நிதி நிறுவனம் ரூபாய் 22 கோடி மோசடி.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட தனியார் நிதி நிறுவனம் பல மாவட்டங்களில் தீபாவளி, பொங்கல் சிட்டு, தங்கத்தின் மீது டெபாசிட் என பல வகையில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்து வந்தது. இந்த திட்டத்தினை நம்பி பல பொதுமக்கள் தங்களுடைய பணத்தை கட்டினர். இந்த நிலையில் தனியார் நிறுவனம் தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டிய தீபாவளி பொருட்களை வழங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பணம் கட்டிய பொதுமக்கள் மற்றும் ஏஜென்டுகள் 100-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அப்போது நிதி நிறுவனத்தில் யாரும் இல்லாததால் பொதுமக்கள் அலுவலகத்திலேயே இருந்தனர். நிறுவனத்தின் உரிமையாளர் 15 நாட்களுக்குள் பொருட்களை தருவதாக 'வாட்ஸ் அப்' பதிவு மூலம் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்திற்கு நிறுவனம் சார்பில் பாண்டு பத்திரம் எழுதி கொடுத்ததாகவும், அதில் டிசம்பர் மாதம் 10-ந்தேதி கொடுக்கப்படும் என குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 10-ந்தேதி செங்கல்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முகவர்கள் செய்யாறு நகரில் தீபாவளி பண்டு சீட்டு நடத்திய நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். ஆனால் அலுவலகத்தில் யாரும் இல்லாததால் உரிமையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. மேலும் உரிமையாளரும் அவர் குடும்பத்துடன் தலைமறைவு ஆகியது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முகவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் நேரில் வரவேண்டும் எனக்கூறினர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், நீங்கள் கொடுக்கும் புகார்களை பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இதுவரை 250-புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் 50 புகார் மனுக்களை பாதிக்கப்பட்டவர்கள் செய்யாறு காவல்நிலையத்தில் கொடுத்து வருகின்றனர்.
இந்த புகார் மனுக்களை மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள நிதி நிறுவன உரிமையாளர் சம்சுமைதீனை தேடி வருகின்றனர். மேலும் சம்சுமைதீன், குடும்பத்துடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருககீர்த்தி, கோபிநாதன் ஆகியோர் முன்னிலையில் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் கவிதா அந்த வீட்டிற்கு சீல் வைத்தார்.
இந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளரின் உறவினரான வந்தவாசி பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நிஷா என்பவரது வீட்டில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மற்றும் ஆய்வாளர் கவிதா ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை செய்ய சென்றனர். மேலும் சம்சு மொய்தீன் உறவினரான நிஷா வீட்டை பூட்டி போலீசார் சீல் வைத்தனர். தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி 22 கோடி மோசடி செய்து நிதி நிறுவனர் தலைமறைவான சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.