தஞ்சை அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 10 பவுன் நகைகள், பித்தளை பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
தஞ்சை அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் பொருட்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் (64). விவசாயி. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்துக்குச் சென்றார்.
பின்னர் நேற்று (புதன்கிழமை) இவரது வீட்டு முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதாக ஸ்ரீரங்கத்துக்கு அக்கம்பக்கத்தினர் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடன் பிள்ளையார்பட்டிக்கு திரும்பி வந்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 10 பவுன் நகைகள், பித்தளை பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் ஸ்ரீரங்கம் புகார் செய்தார். தொடர்ந்து சம்பவ இடத்தை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பைக்குகள் திருடிய 4 பேர் கைது
தஞ்சை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து பைக்குகள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 38 பைக்குகள் மீட்கப்பட்டன.
தஞ்சாவூர் மற்றும் சுற்று பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருட்டு போனது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தன. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவிட்டார்.இதையடுத்து தஞ்சை நகர டிஎஸ்பி., ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்த தனிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், போலீசார் புகழேந்தி, திருக்குமரன், கோதண்டம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த தனிப்டையினர் பைக்குகள் திருட்டு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையல் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த ராஜ் (29), ஆனந்த் (31), கோபிநாத் (19), பிரகலாதன் (19) ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 38 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட 4 பேரையும் தஞ்சை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவுசெய்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.