சல்லடை வைத்து சலிக்கும் போலீஸ்! பெட்ரோல் குண்டுவீச்சில் சிக்கிய 24 பேர்! வலையில் 250 பேர்
தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 250 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்கள் அலுவலகங்கள் மற்றும் பிரமுகர்கள் வீடுகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைதிப்பூங்காவாக திகழும் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கும் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இதுவரை 24 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை, சேலம் மற்றும் ஈரோட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரில் பேருந்து மீது கல்வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த அரித்திரி சலீம் மற்றும் சிராஜூதின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள் , பொன்ராஜ், சிவா, சரவணக்குமார் ஆகியோர் கார், ஆட்டோ, தாக்கப்பட்ட வழக்கில் ஃபாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் முகமது ரபீக் (26) மாலிக் என்ற சாதிக்பாஷா (32), ரமீஸ் ராஜா (36) ஆகியோரை தனிப்படை கைது செய்தது.
முன்னதாக, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கோவையில் உள்ள சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம். ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகிக்கு சொந்தமான கடை, மேட்டுப்பாளையத்தில் உள்ள பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடு மற்றும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள பா.ஜ.க. பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது.
இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், கோவை சாய்பாபா காலனியில் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. மதுரையில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சேலத்திலும், கன்னியாகுமரியிலும் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. நேற்று நள்ளிரவு தூத்துக்குடியில் பா.ஜ.க. நிர்வாகிக்கு சொந்தமான பேருந்து மீதும் பெட்ரோல் குண்டுவீச முயற்சி நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் உள்ள பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
அடுத்தடுத்து நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களால் தமிழக மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர். கோவையில் மட்டும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்தார். மேலும், இந்த தொடர் சம்பவங்களால் கோவை மாநகர உளவுப்பிரிவு துணை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டார்.