இலங்கை கடற்படை அட்டூழியம் - தமிழக மீனவர் உயிரிழப்பு - நடுக்கடலில் நடந்தது என்ன?
படகில் இருந்த மூக்கையா, மலைச்சாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு மீனவர்கள் மாயமான நிலையில் தற்போது மலைச்சாமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டு நெடுந்தீவு கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு- ஒருவரை தேடும் பணி தீவிரம்- இருவர் கைது: உறவினர்கள் சாலை மறியல்.
இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் மீன் பிடி விசைப் படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் கடலில் மாயமான ஒருவரை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இருவரை கைது செய்த இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 397 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர்.அப்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் விசைப்படகு நடுக் கடலில் மூழ்கியது.இதில் படகில் இருந்த மூக்கையா, மலைச்சாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு மீனவர்கள் மாயமான நிலையில் தற்போது மலைச்சாமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டு நெடுந்தீவு கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் கடலில் மூழ்கி மாயமான ஒருவரை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தேடி வரும் நிலையில் படகில் இருந்த மேலும் இருவரை மீட்டு காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே உயிரிழந்த மீனவரின் உறவினர்கள் மற்றும் காணாமல் போன மீனவர்கள் உறவினர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் கண்ணீருடன் காத்திருந்த நிலையில் தனுஷ்கோடி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்p மீனவர்களின் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நடுக்கடலில் மாயமான மீனவரை தேடும் பணியில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டரும் இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமுக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்றும் சர்வதேச கடல் எல்லை பகுதியில்; ஈடுபடுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.