பயிரை மேய்ந்த வேலிகள் - சாராய விற்பனைக்கு துணைபோன மதுவிலக்கு போலீசார் கூண்டோடு ட்ரான்ஸ்பர்
பணியாற்றிய அனைவரும் சீர்காழி மது விலக்கு அமல்பிரிவு காவல்நிலையம் ஆள் இன்றி பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது விற்பனை நடைபெறுவதாகவும், இந்த மது விற்பனைக்கு சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் துணைபோவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்தது. மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து இதில் சம்பந்தப்பட்ட சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதாவை, தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இதேபோல் தஞ்சை காவல் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையில் யாரேனும் ஈடுபட்டாலோ அல்லது அதற்கு காவல்துறையினர் உடந்தை என்று தகவல் வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி கயல்விழி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒன்பது பெண் காவலர்கள் உட்பட 16 பேர் பணியில் இருந்தனர். இந்த சூழலில், சாராய விற்பனை தொடர்பான புகாரில் காவல் ஆய்வாளர் கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவருக்குக் கீழ் பணிபுரிந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் உட்பட 16 பேரையும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட 16 பேர் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சீர்காழி மது விலக்கு அமல்பிரிவு காவல்நிலையம் ஆள் இன்றி பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் காவலர்கள் அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காவல் நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல் துறையினரின் ரோந்துப் பணி இருக்கும்போதே தாராளமாக மது விற்பனை கள்ளச்சந்தையில் நடைபெற்று வந்த இந்த சூழலில், தற்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ஒருவர் கூட சீர்காழியில் இல்லாத நிலையில் மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர் கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.