சொகுசு காரில் வந்த பெண்.. சிக்கிய 11 மூட்டைகள்.. 'ஷாக்' ஆன போலீசார்..!
நாகையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதை பொருளை சொகுசுக் காரில் கடத்தி வந்த பெண் உட்பட இருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்: மதுரையில் இருந்து சொகுசுக் கார் மூலம் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 மூட்டை தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போதை பொருட்களை நாகையில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட இருவரை கைது செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட காரில், ஒரு முக்கியப் பிரமுகரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது, இதுகுறித்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரகசியத் தகவலும் திடீர் சோதனையும்
மதுரையில் இருந்து நாகப்பட்டினத்திற்குப் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் மூட்டைகள் சொகுசுக் கார் ஒன்றில் கடத்தி வரப்படுவதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் நாகை கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாகை நீதிமன்றம் பின்புறம் வந்த சொகுசுக் கார் ஒன்றில் இருந்து, அங்கு தயாராக இருந்த ஆம்னி வேனுக்கு ஹான்ஸ் மூட்டைகள் ரகசியமாகக் கை மாற்றப்படுவதை போலீசார் கண்டனர்.
அதிரடி சுற்றி வளைப்பு, பொருட்கள் பறிமுதல்
உடனடியாகச் செயல்பட்ட தனிப்படை போலீசார், அந்த இரண்டு வாகனங்களையும் அதிரடியாகச் சுற்றி வளைத்துத் தடுத்து நிறுத்தினர். தடை செய்யப்பட்ட போதைப்பொருளான ஹான்ஸ் பாக்கெட்டுகளை மூட்டை மூட்டையாகக் கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர். மேலும், அந்தக் காரின் டிக்கியில் பதுக்கி கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 ஹான்ஸ் மூட்டைகளையும் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசுக் கார் மற்றும் ஆம்னி வேன் ஆகிய இரு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் மூட்டைகள் மற்றும் வாகனங்களை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த தனிப்படை போலீசார், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நாகை வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரின் மனைவி தீபிகா மற்றும் நாகையை அடுத்த பாப்பாக்கோவில் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் நீதிபதி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கார் நம்பர் பிளேட்டில் பிரமுகர் பெயர்!
இந்த ஹான்ஸ் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரின் நம்பர் பிளேட்டில், "சர்வதேச உரிமைகள் கழக மாநில துணை பொதுச் செயலாளர் கே.பி.ஸ்ரீநாத்" என எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடத்தல் சம்பவத்திற்கும், காரில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் பிரமுகருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நாகை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் நாகை மாவட்டம் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், போதை பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல்களை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் குற்றவாளிகள் இதுபோன்று காவல்துறையினர் கண்களில் மண்ணைத் தூவி விதமாக பல்வேறு வழிகளில் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வருவது குறைந்தபாடில்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், போதைப் பொருட்களை தடுக்க காவல்துறையினர் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, அவர்களுடன் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.






















