10 ஆண்டு காதலுக்கு எதிர்ப்பு - காதலன் கொடூர கொலை: காதலியின் தாயார் மிரட்டும் வீடியோவால் பரபரப்பு
மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தில் 10 ஆண்டுகள் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலன் வைரமுத்து (28) அடையாளம் தெரியாத நபர்களால் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடூர கொலைச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, காதலனின் தாயார் விஜயா, வைரமுத்துவை மிரட்டிய வீடியோ ஒன்று வெளியாகி, இச்சம்பவத்தில் காதலியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
10 வருட பந்தம்
மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமம், பெரிய தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் 28 வயதான வைரமுத்து. இவர் ஒரு டூ வீலர் மெக்கானிக். அதே கிராமத்தில் உள்ள பெரியகுளம் அருகே வசிக்கும் குமார் என்பவரின் மகள் 26 வயதான மாலினி. மாலினி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக வைரமுத்துவும், மாலினியும் காதலித்து வந்தனர். இவர்களது காதல், கிராமத்தில் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்தாலும், மாலினியின் குடும்பத்தினர் இக்காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

மோதல் மற்றும் மிரட்டல்
சமீபத்தில், மாலினியின் தாயார் விஜயா, வைரமுத்து வேலை செய்யும் டூ வீலர் மெக்கானிக் கடைக்குச் சென்று அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விஜயா, வைரமுத்துவை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இந்த மிரட்டல் வீடியோ பதிவு செய்யப்பட்டு தற்போது காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாலினியின் குடும்பத்தினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வைரமுத்து மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். விசாரணையின் போது, மாலினி எந்தவித தயக்கமும் இன்றி, தான் வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாலினியின் குடும்பத்தினர், தங்கள் மகள் மீது கோபம் கொண்டு, அவரை நிராகரித்தனர்.

குடும்பத்தை விட்டு வெளியேறிய மாலினி
காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த மாலினி, தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து, நேராக வைரமுத்துவின் வீட்டிற்குச் சென்றார். அங்கு, வைரமுத்துவின் பெற்றோர், அவருக்கும், மாலினிக்கும் விரைவில் பதிவு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர். மாலினி வைரமுத்துவின் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில், மாலினி தனது வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
கொடூரமான கொலை
மாலினி சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற சில மணி நேரங்களில், இரவு நேரத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வைரமுத்துவை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்தனர். அடியமங்கலம் அருகே வைரமுத்துவை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். வைரமுத்துவின் கழுத்து, இரண்டு கைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஆழமான வெட்டு காயங்கள் ஏற்பட்டன. அவர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடினார். உடனடியாக கிராமத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை மற்றும் வீடியோ ஆதாரம்
இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், கிராமத்தில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதவாறு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வைரமுத்துவின் குடும்பத்தினர், இச்சம்பவத்திற்கு மாலினியின் குடும்பத்தினரே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மாலினியின் தாயார் விஜயா, வைரமுத்துவிடம் வாக்குவாதம் செய்த போது, “அப்பவே உன்னை தட்டியிருக்க வேண்டும்” என்று மிரட்டும் வீடியோ பதிவை காவல்துறையில் சமர்ப்பித்துள்ளனர். இந்த வீடியோ, இக்கொலையில் மாலினியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து போலீசார், மாலினியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட இந்த கொடூர கொலை சம்பவம், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. காதலர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






















