சீர்காழி அருகே பயங்கரம்... ஒரு இளைஞரை 4 பேர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ
சீர்காழி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவரை, நான்கு பேர் சேர்ந்து கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிக் கொண்டனர்.

சீர்காழி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவரை, நான்கு பேர் சேர்ந்து கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இரு தரப்பும் சமாதானம் செய்யப்பட்டு இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வடகால் கடைவீதிக்கு வந்த நரேஷை மேற்படி மணிகண்டன், ஜெகதீஷ், மணிமாறன் உள்ளிட்ட நான்கு நபர்களும் சேர்ந்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு பலமாக தாக்கி அடித்துள்ளனர்.

அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த நரேஷ், ராஜா, பாக்கியராஜ் சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மணிகண்டன் காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு தரப்பினர் இடைய முன்விரோதம் காரணமாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷ், மற்றும் மணிமாறனை புதுப்பட்டணம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






















