Mayiladuthurai: கைவிட்ட பிள்ளைகள்...வாழ வழியின்றி கருணை கொலை செய்ய மனு அளித்த தாய், தந்தை..!
மயிலாடுதுறையில் மகன்கள் சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாக கணவன், மனைவி இருவரும் வாழ வழியில்லாததால் தங்களை கருணை கொலை செய்யும்படி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் 86 வயதான முதியவர் தங்கசாமி. இவர் அவரது மனைவி 75 வயதான சாரதாம்பாள் என்பவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்கு சொந்தமான நிலத்தை தனது நான்கு மகன்களுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுத்துவிட்டு, இவருக்கும் இவரது மனைவிக்கும் பூர்வீக வீடு மற்றும் 125 சென்ட் நிலம் ஆகியவற்றை ஒதுக்கி இருந்தார்.
இந்நிலையில், தங்கசாமி மனைவி சாரதாம்பாளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அப்போது சீர்காழி அரசு மருத்துவமனையில் மருந்தாளராக வேலை பார்த்து வரும் மூத்த மகன் உத்திராபதி மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் உடல் நலம் தேறி வந்தார். பின்பு இவரது மனைவியிடம் பத்திரத்தில் ஏமாற்றி கையெழுத்து வாங்கி, இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாகத்தையும் சாமர்த்தியமாக உத்திராபதி தனது மகன்கள் பேருக்கு எழுதிக் கொண்டார் என தங்கச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், குடியிருந்த வீட்டை அபகரித்துக் கொண்டு தாய், தந்தையர் இருவரையும் வீட்டை விட்டு விரட்டி விட்டுள்ளார். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய முதியவர் தங்கசாமி மற்றும் அவரது மனைவி இருவரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை அதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படவில்லை.
அதனால் மனமுடைந்த வயதான தம்பதியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது சொத்தை மீட்டு தர வேண்டும் எனவும், இல்லையென்றால் தங்களை கருணை கொலை செய்து விடுங்கள் எனவும் கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர். மனுவினை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மகாபாரதி, இரு தரப்பையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சொத்தை அபகரித்துக் கொண்ட மகன்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வயதான தம்பதியினர் தங்களை கருணை கொலை செய்யும்படி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தங்களை கருணை கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். வயதான தம்பதியினரின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிள்ளை பேற்றை வரமாக கொண்டாடி வருகிறோம். அதும் ஆண் பிள்ளை என்றால் 'எக்ஸ்ட்ரா' பெருமை வேறு. 'தென்னைய வச்சா இளநீர், பிள்ளைய பெத்தா கண்ணீர்' என்று தமிழ் சினிமா பாடலில் கேட்டிருப்போம். ஆனால் குழந்தை செல்வத்தையும், தாய்மையையும் யாரும் வெறுப்பதில்லை. கால சூழலில் நாம் கொண்ட பெற்றோர்கள் பிள்ளைகள் மீதான வைத்த அன்பும், குழந்தைகள் பெற்றோர் மீது வைத்த அன்பு மாறுவதும் இயல்புதான். ஆனால் இந்தியா போன்ற 'குடும்ப' வாழ்க்கை முறைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் இது போன்ற நிகழ்வுகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. விரைவில் அந்த பெற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.