பாஸ்வேர்டு தேவையில்லை.. வைஃபை கார்டை குறி வைத்து திருடி உல்லாச வாழ்க்கை.. இளைஞர் அதிரடி கைது!
வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம்களில் தவறவிடும் வைஃபை ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு பணத்தைத் திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம்களில் தவறவிடும் வைஃபை ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு பணத்தைத் திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணாமல் போன கார்டு:
சென்னை அம்பத்தூர் பாடி அருகே பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கொளத்தூரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது செல்ஃபோனுக்கு கடந்த ஜூலை 14ம் தேதி இரவு 9.30 மணி அளவில் ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் அவரது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஆயிரம் ரூபாய்க்கு பொருள்கள் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து அவர் தனது டெபிட் கார்டைத் தேடியுள்ளார். பின்னர் தான் அவரது கார்டு காணாமல் போனது தெரியவந்தது.
தொடர் பணம் திருட்டு:
பிரபல துணிக்கடை மற்றும் ஹோட்டல்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகத் தொடர்ந்து மெசேஜ் வந்துள்ளது. இதுபற்றி மறுநாள் காலை கொரட்டூர் காவல்நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். புகாரினை பதிவு செய்துகொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையில் புகார் கொடுத்த பின்னரும் பணம் டெபிட் ஆகியிருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. அருகில் உள்ள டாஸ்மாக் ஒன்றில் மதுபானம் வாங்கியதாக அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வங்கியைத் தொடர்புகொண்ட சரவணன் தனது ஏடிஎம் கார்டை முடக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு துணிக்கடை, ஹோட்டல் மற்றும் டாஸ்மாக் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒருவர் மட்டும் மூன்று இடங்களுக்கும் சென்று வந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் பாடியை அடுத்த மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. இவர் தான் சரவணனின் டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுத்ததும் தெரியவந்தது.
சிக்கிய திருடன்:
சுரேஷ் சரவணனின் கார்டு மட்டும் அல்லாமல், ஏடிஎம் மையங்களில் கார்டுகளை மறந்து விட்டுச் செல்லும் வாடிக்கையாளர்களின் கார்டுகளை எடுத்து வைஃபை மூலம் பணத்தைத் திருடி உல்லாச வாழ்க்கை இருந்து வந்துள்ளார். கடந்த 10ம் தேதி திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தீபா என்பவரின் வைஃபை கார்டைத் திருடி 79 ஆயிரம் ரூபாய் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகளை கைப்பற்றியதோடும் 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல்,செய்ததோடு2, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வைஃபை கார்டு என்பது பாஸ்வேர்டை பதிவு செய்யாமலேயே குறிப்பிட்ட தொகை வரை பணம் செலுத்தும் வசதியை கொண்ட முறையாகும். இந்த முறைக்கு எதிராக ஏற்கனவே எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் தற்போது இப்படியான சம்பவம் நடந்துள்ளது. பணப் பரிவர்த்தனைகளை எளிமையாக்க வங்கிகள் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் பணமும் திருடப்படுவது அதிகரித்துள்ளது.