செந்தில்-வடிவேலு கூட்டணி போல இளநீரை திருடி விற்பனை செய்த பலே ‛ரஜினி’ கைது!
கோயம்போடு பகுதியில் முதலீடு இல்லாமல் திருடப்பட்ட இளநீரை விற்று நல்ல வருவாய் பார்த்து வந்ததும் தெரியவந்தது.
சென்னை எம்.ஜி.ஆர்., நகரில் வசிப்பவர் லிங்கம். சென்னை கே.கே.நகர் 80 அடி சாலையில் உள்ள நடைபாதையில் பல ஆண்டுகளாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். மொத்த இளநீர் வியாபாரியான இவர், வெளியூரிலிருந்து இரவு லாரி மூலம் வரும் இளநீரை, சம்மந்தப்பட்ட நடைபாதையில் இறக்கி வைத்து தார்பால் கொண்டு அவற்றை மூடி வைப்பார். மறுநாள் காலை சில்லரை வியாபாரிகளுக்கு அவற்றை விற்பது வழக்கம். இப்படி தான் அவரது அன்றாட வியாபாரம் பிரச்சனை இல்லாமல் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அடுக்கி வைக்கப்படும் இளநீர், காலையில் பார்க்கும் போது 100ல் இருந்து 200 வரை எண்ணிக்கை குறைந்திருந்தது.
தினமும் இப்படியே குறைந்து கொண்டிருக்க.. ‛என்னடா... எங்கேடா... குறையுது....’ என நொந்து கொண்டார் லிங்கம். யாரோ ஒருவர் இளநீரை திருடி செல்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால், யார் அது... எப்படி திருடுகிறார் என்கிற விபரம் எல்லாம் அவரிடத்தில் இல்லை. பின்னர் அவரது கடை அருகே உள்ள அப்பார்மெண்ட்க்கு சென்ற லிங்கம், அங்குள்ள மக்களிடம் உதவி கேட்டார். தனது கடையில் தினமும் இளநீர் திருடப்படுவதாகவும், உங்களில் உள்ள சிசிடிவி உதவியோடு அதை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுள்ளார். அவர்களும் உதவ முன்வந்தனர். அதன் படி சிசிடி காட்சியும் கிடைத்தது. ஆனால் அதில் இளநீர் திருடும் நபர் யார் என்கிற விபரம் தெளிவாக தெரியவில்லை.
என்னடா எல்லாம் கைகூடியும் ஆளை பிடிக்க முடியவில்லையே என நொந்து கொண்ட லிங்கம், நேரடியாக களத்தில் இறங்க முடிவு செய்தார். அதன் படி, சம்பவத்தன்று இளநீர் இறக்கிவிட்டு, நள்ளிரவு 1 மணியளவில், அப்பகுதியில் தன் நண்பர்களுடன் பதுங்கிக் கொண்டார் லிங்கம். சிறிது நேரத்தில் அங்கு வந்த நபர், அடுக்கி வைக்கப்பட்டிருந்த இளநீர் கொத்துகளை ஒவ்வொன்றாக எடுத்து தான் கொண்டு வந்த ட்ரை சைக்கிளில் ஏற்றத் தொடங்கினார். உடனே அவர் அருகில் வந்த லிங்கம் மற்றும் அவரது நண்பர்கள், சம்மந்தப்பட்ட நபரை சுற்றி வளைத்தனர். அந்த நபரை பார்த்த லிங்கத்திற்கு ஒரே ஷாக்.
அந்த நபர், லிங்கத்திற்கு நன்கு பரிட்சயமான முகம். முன்பு லிங்கத்திடம் வியாபார தொடர்பில் இருந்தவர். தெரிந்த முகம் தான். ஆனாலும் பெயர் உள்ளிட்டவை அவருக்கு நியாகம் இல்லை. ‛எத்தனை நாட்களாக இளநீர் திருடுகிறாய்...’ என அவரிடம் கேட்ட போது, ‛இன்று மட்டும் தான்...’ என்று அந்த நபர் கூறினார். ‛பார்த்தா... அப்படி தெரிவில்லையே...’ என எதிர்கேள்வி கேட்க, அந்த நபர் எந்த பதிலும் கூறவில்லை. உடனே அவரை மடக்கிபிடித்த லிங்கம் உள்ளிட்ட நண்பர்கள், அவரை கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின் நடந்த விசாரணையில் அவர் சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பதும், இளநீர் வியாபாரியான அவர், கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை முறையான இளநீர் வியாபாரம் செய்து வந்ததாகவும், ஊரடங்கால் வறுமையில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வர இளநீரை திருடி , கோயம்போடு பகுதியில் கடை போட்டு விற்று வந்தது தெரியவந்தது. முதலீடும் இல்லாமல் திருடப்பட்ட இளநீரை விற்று நல்ல வருவாய் பார்த்து வந்ததும் தெரியவந்தது.
சினிமா ஒன்றில் கவுண்டமணியின் இளநீர் கடையில் வேலை செய்யும் செந்தில், அவற்றை திருடி வடிவேலுவை வைத்து தனிக்கடை ஒன்று போட்டு பெரிய ஆளாக மாறுவார். அதே போன்று ரஜினிகாந்தும் லிங்கத்தின் இளநீரை திருடி விற்பனை செய்து வந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.