`200 கோடி ரூபாய் மோசடி!’ - பிரபல நடிகை லீனா தனது கணவருடன் கைது!
நடிகை லீனா மரியா பால் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரது கணவர் சுகேஷ் சந்திரசேகர் இதே வழக்கில் ஏற்கனவே காவல்துறை கட்டுப்பாட்டில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
நடிகை லீனா மரியா பால் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் கடந்த செப்டம்பர் 5 அன்று கைது செய்யப்பட்டார். இவரது கணவர் சுகேஷ் சந்திரசேகர், ரான்பாக்ஸி மருந்து நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கை சுமார் 200 கோடி ரூபாய் ஏமாற்றியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான தனது புகாரில், அதிதி சிங், ‘மத்திய அரசுடன் இணைந்து கொரோனா தடுப்புக்கு அமைக்கப்படும் ஆணையங்களில் எனது கணவருக்குத் தொழில்துறை ஆலோசகர் என்ற பொறுப்பு வழங்கப்படும் என எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. அதற்காக கட்சிக்கு நிதி தர வேண்டும் எனவும், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அல்லது உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் எங்களுக்கு சொல்லப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதே சுகேஷ் சந்திரசேகர் மீது ஏற்கனவே ரான்பாக்ஸி நிறுவனத்தின் மற்றொரு உரிமையாளரான மால்விந்தர் சிங்கின் மனைவி ஜப்னா சிங்கிடம் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரியாக நடித்து ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தற்போது சுகேஷ் சந்திரசேகர் மீது இரண்டு எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 4 அன்று, டெல்லி நீதிமன்றம் சுகேஷ் சந்திரசேகருக்கு 16 நாள்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது. சுகேஷ் சந்திரசேகர் மீது பிறரை ஏமாற்றியதாக இதுவரை 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் டெல்லி காவல்துறை சுகேஷ் மீது மகாராஷ்ட்ரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்காக முடிவெடுத்தனர்.
இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி நடிகை லீனா மரியா பால், அதிதி சிங் அளித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை லீனா மரியா பாலிடம் அமலாக்கத்துறையினர் பல மணி நேரங்கள் விசாரணை நடத்தியதில் அவருக்கும் இந்தக் குற்றத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்தும், ஆதாரங்களையும் காவல்துறையினர் சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை லீனா மரியா பால் மலையாள சினிமாவைச் சேர்ந்தவர். `ரெட் சில்லீஸ்’ என்ற திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தவர் லீனா. இவர் ஜான் ஆபிரகாம் நடித்த ‘மெட்ராஸ் கபே’ என்ற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்தவர்.
லீனா மரியா பால் ஏமாற்றுவது, மோசடி முதலான குற்றங்களுக்காக கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2003ஆம் ஆண்டு, சென்னை வங்கி ஒன்றை 19 கோடி ரூபாய் ஏமாற்றியதற்காக அவரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு, கொச்சினில் லீனா நடித்தி வந்த அழகு நிலையம், ஹைதராபாத் லஞ்ச ஒழிப்புத் துறையின் உத்தரவின் பெயரில், சிபிஐ அதிகாரிகளால் ரெய்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.