செல்ஃபி மோகம்: 500 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த மதுரை இளைஞர்: கொடைக்கானலில் ட்ரோன் மூலம் தேடும் பணி!
இந்த பகுதி மலைமுகடுகள் நிறைந்த பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிப்பதுடன், ஆபத்தான செங்குத்தான பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியாகும்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து 8 நபர்கள் கொண்ட இளைஞர் குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர். நேற்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த இளைஞர் குழுவினர் வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த பகுதி மலைமுகடுகள் நிறைந்த பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிப்பதுடன், ஆபத்தான செங்குத்தான பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியை கண்டு ரசித்த பின் இளைஞர் குழுவினர் இதே பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மது அருந்திவிட்டு இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர். இந்நிலையில் ராம்குமார்(32) என்ற இளைஞர் மட்டும் பாறையின் நுனி பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்ற போது நிலை தடுமாறி சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்து மயமானதாக கூறப்படுகிறது. மாயமான இளைஞரை உடன் வந்த இளைஞர்கள் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததை தொடர்ந்து மாயமான இளைஞரின் நண்பர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அடிப்படையில் வந்த காவல் துறையினர் இளைஞர் மாயமான இடத்தையும்,உடன் வந்த இளைஞர்களிடம் விசாரணை செய்தனர்,விசாரணையில் அனைவரும் மது போதையில் இருந்ததாகவும்,செல்பி எடுக்கும் போது ராம்குமார் தவறி விழுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
நேற்று ரெட்ராக்பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் மாயமான இளைஞரை தேட உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை முதல் ரெட்ராக் பகுதியில் டிரோன் கேமரா மூலம் மாயமான இளைஞரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் குழுவாக 20க்கும் மேற்பட்டோர் இணைந்து செங்குத்தான பாறைப்பகுதிகளில் பாதுகாப்பான முறையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கயிறு கட்டி இறங்கி தேடிவருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தினை கோட்டாட்சியர் முருகேசன் பார்வையிட்டு மாயமான இளைஞரை தேடும் பணியில் டிரோன் கேமரா மூலம் சுமார் 1000 அடி வரை பள்ளத்தாக்கு வரை கண்காணித்து தேடி வருகின்றனர். அடர்ந்த மேக மூட்டம் ரெட்ராக் பகுதியில் மீண்டும் நிலவி வருவதால் இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் எல்லை மீறியதால் ஏற்பட்ட இந்த விபரீதம், தற்போது ஒரு இளைஞரின் வாழ்க்கைய கேள்விக்குறியாக்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்