Pocso | 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. 57 வயது நபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 57 வயது நபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனைவிதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 57 வயது நபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனைவிதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு-மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாநாயக்கன்பட்டியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த சிறுமியின் வீட்டருகே வசிக்கும் 57 வயது முதியவர் முருகப்பன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் விசாரணை மேற்கொண்டபோது முதியவர் முருகப்பன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து 5 வயது சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்ற போலீஸார் முதியவர் முருகப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்வேறு கட்டமாக நடைபெற்று வந்த, காவல்துறையின் விசாரணையின் முடிவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. மீண்டும் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முருகப்பனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி சத்யா உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளி முருகப்பன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் இருக்க காவல்துறை தொடர்ந்து கண்காணித்து குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல்துறை அதிகாரிகள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், மிகவும் விழிப்புணர்வுடன் பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டும், என அறிவுரைகள் வழங்கினார்.
தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது .இவற்றை முற்றிலுமாக தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தெரிவித்தார்.