மாநில அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - தமிழிசை செளந்தரராஜன்
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் , மாநில அரசு மீது பெண்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் ஆலோசனை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. போட்டியிடுவது குறித்து, தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் பா.ஜ.க. மையக் குழு கூட்டம் இன்று கமலாலயத்தில் நடைபெற்றது. பாஜக மையக் குழு உறுப்பினர்கள், அண்ணாமலை, எல். முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவது , அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை இதில் செய்யப்பட்டது. அதே நேரத்தில் மையக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனவும் அண்ணா பல்கலைக் கழக சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனவும் பாஜக மையக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் பேசுகையில் ;
எங்களின் மாநில மையக் குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் அண்ணா பல்கலைக் கழக விவகாரம் சம்பந்தமான முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எங்களின் மாநில மையக் குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் சம்பந்தமான முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாநில அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
சிபிஐ விசாரிக்க வேண்டும்
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். ஞானசேகரன் எங்களது அனுதாபி என தெரிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக முதல்வர் பேசுகிறார். முதல்வர் சம்பந்தம் இல்லாமல் பேசி வருகிறார். அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் கவர்னர் மீது அமைச்சர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எதிர் கட்சிகள் மீது அடக்கு முறை
முதல்வர் சட்டப் பேரவையில் தெரிவித்த பதிலில் திருப்தி இல்லை. சி.பி.ஐ. விசாரணை கண்டிப்பாக வேண்டும். அனுதாபி மீதே முதல்வருக்கு அனுதாபம் இருக்கிறதே. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் எதிர்க்கட்சி மீது அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.
எந்த மாவட்டத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
பெண்கள் அனைவரும் தமிழக அரசின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்றார்.