எஸ்.பி.ஐ ஏ.டி.எம் நூதன கொள்ளை : ஹரியானா கொள்ளை கும்பலின் தலைவன் கைது..!
சென்னையில் ஏ.டி.எம். இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடித்த ஹரியானா மாநிலத்தில் கொள்ளை கும்பலின் தலைவனை தமிழ்நாடு தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
சென்னையில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் கடந்த சில வாரங்களாக நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து, போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், வட இந்தியாவைச் சேர்ந்த கும்பல் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்தே இந்த தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், ஹரியானாவைச் சேர்ந்த அந்த கும்பல் தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் தங்களது கைவரிசையை காட்டியிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஹரியானா சென்ற தமிழ்நாடு தனிப்படை போலீசார் கடந்த மாதம் 25-ந் தேதி கொள்ளையன் அமீர்ஹர்சை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர், அமீர்ஹர்சை சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து மூன்று கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த ஏ.டி.எம். கொள்ளை கும்பலின் தலைவனை ஹரியானாவில் தமிழ்நாடு தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த கும்பல் இதுவரை ரூபாய் 49 லட்சம் வரை கொள்ளையடித்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.