(Source: ECI/ABP News/ABP Majha)
வங்கி டெபாசிட் பணத்தை எடுத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு கடனாக வழங்கிய நிர்வாகிகள்!
வங்கியில் நகையே இல்லாமல் நகைக்கடன் கொடுத்ததாக தெரியவந்த நிலையில் தான், தற்போது அந்த பணத்தை சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களிடம் கடனாக கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
திருச்செந்தூர் அருகே குரூம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் மக்கள் டெபாசிட் செய்த பணத்தை சினிமா எடுப்பதற்காக கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பையடுத்து கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் நகை அடகு வைத்திருந்த மக்களிடம் ஆதார், ரேசன் போன்ற அடையாள அட்டைகளையெல்லாம் பெற்றுக்கொண்டு இதுக்குறித்து பரிசீலனை நடைபெற்றுவருகிறது. மேலும் ஒவ்வொரு வங்கியிலும் அதிகாரிகள், வங்கிகளில் உள்ள நகைகளை மதிப்பீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரூம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யார் பல கோடி ரூபாய் மோசடிக்கு காரணம்? பணத்தை என்ன செய்தார்கள் என்ற ஆய்வு முடிவு தான் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
- ,
இவ்வங்கியில் மக்கள் செய்யும் டெபாசிட் பணத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் சேர்க்காமல் இதனை வட்டிக்கொடுக்க வங்கி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இதன் பேரில் சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு கொடுக்கும் போது இரட்டிப்பு பணம் பெறலாம் என்ற ஆசையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். குறிப்பாக சினிமா படம் எடுப்பதற்கு ரூபாய் 20 கோடி கொடுக்கும் போது 6 மாதம் கழித்து 25 கோடியாக வழங்குவார்கள் என மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, ரூ.50 கோடியை குரூம்பூர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சினிமா பிரமுகருக்கு வட்டிக்கொடுத்துள்ளனர். ஆனால் கொரோனா காலம் என்பதால் சினிமாத்துறை முடங்கியதால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இவர்கள் கொடுத்த பணம் திரும்பி வரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சூழலில் தான், அதிகாரிகள் நடத்திய ஆய்விலும் சிக்கிக்கொண்டனர். இச்சம்பவத்தை அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் டெபாசிட் செய்த பணம் இருக்கிறதா? என்று விசாரிக்கையில் பணம் டெபாசிட் ஆகாமல் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித்தலைவர் முருகேசப்பாண்டியன், செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா ஞானபாய் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார் குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதோடு கடந்த 13 ஆம் தேதி கூட்டுறவு வங்கித்தலைவர் முருகேசப்பாண்டினை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லை தமிழம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதோடு வங்கி மோசயில் ஈடுபட்ட பல கோடி ரூபாய் பணத்திற்கு ஈடாக நிர்வாகிகள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் வணிக குற்றவியல் புலனாய்வுப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் வங்கிகளில் ஆய்வு நடத்துவார்கள் என தெரியவருகிறது. முன்னதாக வங்கியில் நகையே இல்லாமல் நகைக்கடன் கொடுத்ததாக தெரியவந்த நிலையில் தான், தற்போது அந்த பணத்தை சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களிடம் கடனாக கொடுத்தது அம்பலமாகியுள்ளது.