(Source: Poll of Polls)
Actor Dileep : கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு.. திலீப்புக்கு செக் வைத்த கேரள நீதிமன்றம்..
2017ஆம் ஆண்டு நடிகை ஒருவரைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்திய வழக்கில் விசாரணைக்குக் கூடுதலாக ஒன்றரை மாதம் கால அவகாசம் வழங்கி விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
2017ஆம் ஆண்டு நடிகை ஒருவரைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்திய வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் மாநில குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கூடுதலாக ஒன்றரை மாதம் கால அவகாசம் வழங்கி விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று முழுவதுமாக முடிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், விசாரணையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக கடந்த மே 30 வரை கேரளக் குற்றப்பிரிவு சார்பில் கால அவகாசம் பெறப்பட்டிருந்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மூன்று மாதங்கள் வரை அவகாசம் கோரியது கேரளக் குற்றப்பிரிவு காவல்துறை. கடந்த ஜூன் 3 அன்று, கேரள உச்ச நீதிமன்ற நீதிபதி கௌசர் எடபகத் தலைமையிலான அமர்வு வரும் ஜூலை 15 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றம், `கூடுதல் விசாரணையில் கிடைத்த பெரியளவிலான ஆதாரங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். குரல் மாதிரிகள், கையெழுத்துப் பிரதிகள் முதலானவை பரிசோதனை செய்யப்படுவதற்காக தடயவியல் பரிசோதனை லேபில் இருந்து இன்னும் கிடைக்கப்படவில்லை. மேலும், சில சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, நீதி கிடைப்பதற்காக கால அவகாசம் கோரப்படுவதை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது’ எனக் கூறியுள்ளது. எனினும் கூடுதல் விசாரணை கால வரையறையின்றி நடைபெறாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் இதுகுறித்து கூறியுள்ள கேரள உயர் நீதிமன்றம், `இந்த வழக்கின் தொடக்க கால விசாரணையும், அதன் அறிக்கையும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட விசாரணை அடுத்த 6 மாத காலத்தில் முடிவடைந்துள்ளது. எனவே இந்த வழக்கின் அனைத்து சூழல்களையும் கணக்கில் கொண்டு, மேல்கட்ட விசாரணையில் முடிவுறாத சிலவற்றை மட்டும் மேற்கொள்ள ஏற்கனவே பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை விசாரணையை விரைவில் முடித்து, இறுதி அறிக்கையை வரும் ஜூலை 15க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி 17 அன்று, கேரளாவில் மலையாள நடிகை ஒருவரின் காரில் ஏறிய சில மர்ம நபர்கள் அவரைக் கடத்தி, சுமார் 2 மணி நேரங்கள் பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கினர். மேலும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அவர்கள் தப்பித்துச் சென்றதோடு, இதனை வீடியோவாகப் படம் எடுத்து பாதிக்கப்பட்ட நடிகையை மிரட்டி வந்தனர்.
இந்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் உள்பட 10 பேர் குற்றவாளிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் திலீப் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விசாரணையில் தனது தனிப்பட்ட தகவல்களை குற்றப்பிரிவு அதிகாரிகள் பார்வையிட முயல்வதாக நடிகர் திலீப் இதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.