Karur Crime News: செயின் அறுந்ததால் ஆத்திரம்: நண்பனை அடித்துக் கொன்ற வாலிபர் கைது!
‛ஆத்திரமடைந்த நான் சங்கிலியை சரிசெய்து தராவிட்டால் அதியமானை கொலை செய்துவிடுவேன் என அவரது பெற்றோரிடம் தெரிவித்தேன்’ -வாக்குமூலம்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நல்லூர் ஊராட்சி அர்த்தம் பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவருடைய மகன் அதியமான்வயது 29. பி எஸ் சி வேளாண்மை பட்டதாரியான இவர், இன்னும் திருமணம் ஆகவில்லை. கல்லடை ஊராட்சி அழகனாம் பட்டியைச் சேர்ந்த பொன்னம்மாவின் மகன் பிரபாகரன் வயது 28 . இவர்கள் 2 பேரும் உயிர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் சிறு சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர் இது சம்பந்தமாக அடிக்கடி இருவரும் சண்டையிட்டு கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அதியமான் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது அவரது உறவினர்கள் அவர் நாள்தோறும் செல்லும் இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் கொண்டாடி பட்டி அருகே உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு (காசி பாண்டியன்) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் இறந்து கிடந்தது அதியமான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அதியமானின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை வழக்கில் அவரது நண்பரான பிரபாகரனுக்கு தொடர்பு இருப்பதாக அதியமானின் பெற்றோர்கள் குளித்தலை போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பிரபாகரனை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் காரணமாக அதியமானை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக பிரபாகரன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும், காவல்துறை விசாரணையில் பிரபாகரன் அளித்த வாக்குமூலம்
அதியமானும், நானும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தோம். எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும், பின்னர் ஒரு நாளில் சரியாகிவிடும். இருந்த போதிலும் கடந்த 29 ஆம் தேதி எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது நான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து விட்டான். அதனை சரி செய்து தருமாறு கூறினேன். அதற்கு அவர் மறுத்து விட்டான். இதனால் ஆத்திரமடைந்த நான் சங்கிலியை சரிசெய்து தராவிட்டால் அதியமானை கொலை செய்துவிடுவேன் என அவரது பெற்றோரிடம் தெரிவித்தேன். இந்நிலையில் கொண்டாடி பட்டி அருகே தனியாக வந்த அதியமானை எனது தங்க சங்கிலியை சரி செய்து தருமாறு கூறினேன். அதற்கு அவர் மறுத்துவிட்டதால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் இரும்பு கம்பியால் அவரது தலையில் தாக்கினேன். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதியமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் பயந்துபோன நான் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டேன். இருப்பினும் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் பிரபாகரன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து நண்பனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த பிரபாகரனை குளித்தலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் அருகே ஆத்திரத்தால் நண்பனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.