‛ஆன் லைனாவது ஆப் லைனாவது...’ அனைத்து சூதாட்டத்திற்கும் தடை விதித்த கர்நாடகா!
கர்நாடகா சட்டமன்றத்தில் கர்நாடகா காவல்துறை சட்டம், 1963 என்ற சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, கர்நாடகாவில் ஆன்லைன் சூதாட்டம் உள்பட அனைத்து விதமான சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
கடந்த செப்டம்பர் 21 அன்று, கர்நாடகா மாநில சட்டமன்றத்தில் கர்நாடகா காவல்துறை சட்டம், 1963 என்ற சட்டத்தில் திருத்தம் கோரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்ததின் மூலம், கர்நாடகா மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டம் உள்பட அனைத்து விதமான சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
கர்நாடகா காவல்துறை திருத்தச் சட்டம் 2021 என்ற பெயரில், கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தாக்கல் செய்துள்ள மசோதா எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேறியுள்ளது. எதிர்க்கட்சிகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையின் நடவடிக்கைகள் மீது கேள்வி எழுப்பின.
அதற்குப் பதிலளித்துள்ள உள்துறை அமைச்சர் ஞானேந்திரா, சமீபத்தில் கர்நாடகாவின் தார்வாட் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு ஒன்றில், சூதாட்ட விடுதிகளில் காவல்துறையினர் சோதனையிட விடுத்துள்ள தடையைச் சுட்டிக்காட்டி, சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்வதற்குக் காவல்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், தனிச்சட்டம் அவசியமாகிறது எனத் தெரிவித்துள்ளார்.
`செல்போன் முதலான எலக்ட்ரானிக் கருவிகள் மூலமாக அதிகளவில் சூதாட்டம் நிகழ்கிறது. அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என அவர் இந்தச் சட்ட திருத்த மசோதாவைக் கர்நாடக சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்திய போது கூறியுள்ளார்.
இந்தச் சட்ட திருத்தத்தின் மூலம், கர்நாடகா காவல்துறை சட்டம் பலப்படுத்தப்பட்டு, சூதாட்டம் என்பது குற்றமாக அறிவிக்கப்படுவதோடு, பிணை வழங்க முடியாத குற்றமாகவும் கருதப்படும். மேலும், கம்ப்யூட்டர் அல்லது பிற எலக்ட்ரானிக், தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி இணையத்திலோ, வேறு செயலிகளைப் பயன்படுத்தியோ சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், சூதாட்டம் குறித்த சட்டம் குதிரை பந்தயத்தை மட்டுமே சூதாட்டம் எனக் கருதுகிறது. மேலும் அதில் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும், சுமார் 1 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. தற்போதைய சட்ட திருத்தத்திற்குப் பின், சிறைத் தண்டனை 3 ஆண்டுகளாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, `மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சூதாட்டம் மிகவும் நிறுவனமயப்படுத்தப்பட்டு, பெரியளவில் நடந்து வருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் குமார், காவல்துறைக்குத் தெரியாமல் எந்த சூதாட்டமும் நிகழாது எனவும், காவல்துறையின் திறனை மேம்படுத்தி, சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களான Dream 11, Mobile Premium League, Games 24x7 முதலானவை பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அனைத்து இந்திய வர்த்தகர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இந்தச் சட்டம் குறித்த தனது அரசின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இது இந்தியாவில் புதிதாகத் தோன்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.