அய்யய்யோ! வாய் பேச முடியாத குழந்தை! முதலை இருக்கும் ஆற்றில் வீசிய கொடூர தாய்!
Mother Throws Son into River: கர்நாடகாவில் பிறந்ததில் இருந்தே வாய் பேச இயலாத தனது மகனை, பெற்ற தாயே ஆற்றில் தூக்கி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
26 வயது பெண் ஒருவர் தனது ஆறு வயது வாய் பேச முடியாத மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியதாக சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்:
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா பகுதிக்கு அருகில் உள்ள தண்டேலி தாலுகாவில் வசித்து வரும் 26 வயதான சாவித்ரி என்ற பெண் மற்றும் 27 வயதான அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 6 வயது என்றும், இரண்டாவது மகனுக்கு 2 மகன் என்றும் கூறப்படுகிறது. மூத்த மகன் பிறந்ததில் இருந்தே பேசும் தன்மை இல்லாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.
கணவன்-மனைவி சண்டை:
இதனால், கணவன் மனைவி இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும், தங்களது மூத்த மகனின் வாய்பேசாத நிலை குறித்து அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் சண்டை போடுவதுமாக இருந்துள்ளனர். வாய் பேச முடியாத குழந்தையை ஏன் பெற்றெடுத்தாய்? என்று ரவிக்குமார் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆற்றில் வீசப்பட்ட குழந்தை:
இந்நிலையில் இருவருக்குமிடையே மோதலானது தீவிரமானதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை, சாவித்திரி தனது மூத்த மகனை காளி ஆற்றுடன் இணைக்கப்பட்ட கழிவு கால்வாயில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் நீர்மூழ்கிக் குழுவினர் உதவியுடன் குழந்தை குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், இருள் சூழ்ந்ததால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
கொலை வழக்கு - கைது:
மறுநாள் காலை, குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தையின் உடலில் பலத்த காயங்கள், முதலை கடித்த காயங்கள் மற்றும் முதலை தாக்கியதால் கை தனியாக சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 109 (எந்தவொரு குற்றத்திற்கும் தூண்டுதல், அதன் விளைவாகத் தூண்டப்பட்ட செயல்) மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் கணவன் - மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பெற்ற மகனையே பாசமின்றியும் மனிதத்தன்மை இல்லாமலும், மிருகங்களை விட கொடூரமாக தாய் தந்தையரே நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.