மேலும் அறிய
Advertisement
Crime: டீ கடையில் பிளான் போட்டு அடுத்த நொடியே மூட்டை மூட்டையாக செல்போன் கொள்ளை; சிக்கிய வட இந்திய கொள்ளையர்கள்
குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் வெகுவாக பாராட்டினார் .
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சுங்குவார்சத்திரம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ஆப்பிள், ரெட்மி, ரியல்மீ, சாம்சங், விவோ போன்ற ரூ.43 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக அப்துல் ரஹீம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
மூட்டையில் செல்போனை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவில் வந்த மூன்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதத்தின் மூலம் ஷட்டரை உடைப்பதும், பின்னர் இருவர் முகத்தை மறைத்துக் கொண்டு உள்ளே சென்று கடையில் உள்ள செல்போன்களை கோணி பையில் மூட்டை கட்டி ஆட்டோவில் எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது. மேலும் இது குறித்து அப்துல் ரஹீம் அளித்த புகாரின் பேரில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
இந்நிலையில், செல்போன்களை திருடிய வழக்கில் ஹரியானாவை சேர்ந்த இம்ரான், ஜாபித், அலிஜன், ஹமீது ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 4 பேரிடம் இருந்து 234 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் மதிப்பு 43 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
டீ குடிக்கும்போது போட்ட பிளான்
காவல்துறை நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் 4 பேர் மீதும் ஏற்கனவே, பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் வட இந்தியாவில் இருந்து, லாரியில் கொண்டு வந்த கார்களை, துறைமுகத்தில் இறக்கிவிட்டு, செல்லும்பொழுது இரும்பு கழிவுகளை கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு வந்துள்ளனர்.
பின்னர் முகமூடியை பயன்படுத்தி, சுங்குவார்சத்திரம் பகுதியில் சதி வேலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சுங்குவார்சத்திரம் பகுதி அருகே, டீ குடித்துள்ளனர். அப்பொழுது, எதிரே செல்போன் கடை ஒன்று இருப்பதை நோட்டமிட்டுள்ளனர். செல்போன் கடையில் கொள்ளை அடித்தால், பெரிய லாபம் கிடைக்கும் என்பதை, கணித்த கொள்ளையர்கள் அடுத்த சில மணி நேரத்திலேயே திட்டம் தீட்டி கனகச்சிதமாக, மூட்டையில் செல்போன்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
பாராட்டிய எஸ்.பி
இந்தநிலையில், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சிறப்பாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினரை காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் பாராட்டினார். இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த எஸ்.பி.சுதாகர் கூறுகையில், சயின்டிஃபிக் முறையில், குற்றவாளிகளை ட்ரேஸ் செய்து விரைவாக பிடித்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். பொதுவாக தொழில் நிறுவனங்கள் புதிதாக யாராவது ஒருவரை, வேலையில் இணைக்கும் பொழுது போலீஸ் வெரிஃபிகேஷன் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறோம் .அதன் அடிப்படையிலேயே தற்போது நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தீரன் பட பாணியில்
துரிதமாக, செயல்பட்ட ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மற்றும் காஞ்சிபுரம் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் தமிழ்நாட்டில் இருந்து, தப்புவதற்கு முன்பாகவே மடக்கி பிடித்துள்ளனர். தீரன் பட பாணியில் மற்றொரு விதமான புதிய கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion