கள்ளக்குறிச்சி: கந்துவட்டி கொடுமையால் வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை
கந்துவட்டி கொடுமையால் கள்ளக்குறிச்சி வாலிபர் தற்கொலை- உருக்கமான வீடியோ, ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வம் மகன் திருவேங்கடம் என்கிற தினேஷ் (வயது 25). இவர், கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பகுதிநேர ஊழியராக வேலை செய்து வந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த தினேஷ் தனது தாய் சித்ரா, தங்கையுடன் வசித்து வந்தார். தினேஷ் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே விஷம் குடித்துவிட்டு தனது செல்போனில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் குறித்து உருக்கமான வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்த தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து விட்டேன். விஷம் குடிக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் என் அம்மாவும், எனது தங்கையும் தான் கண்ணில் தெரிந்தார்கள். கடன் கொடுத்தவர்கள் மனரீதியாக எனக்கு தொல்லை செய்தார்கள். பொரசக்குறிச்சியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினேன். அவருக்கு இதுவரை கூகுள்பே மூலம் ரூ.7½ லட்சம் போட்டு உள்ளேன். அதுமட்டும் இல்லாமல் பெடரல் வங்கி மொபைல் பேங்க்கிங் மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்பி உள்ளேன். மற்றொரு வீடியோ பதிவில், சில நண்பர்கள் பெயரை கூறி எனது அம்மாவையும், தங்கையையும் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை தான் நம்பியுள்ளேன்.
தனியார் நிறுவன உரிமையாளர் எனக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும். அந்த பணத்தை வாங்கி என் அம்மாவிடம் கொடுங்கள். பொரசக்குறிச்சியை சேர்ந்தவர், எனக்கு ரொம்ப டார்ச்சர் கொடுத்ததோடு, நேற்று இரவுக்குள் ரூ.1½ கோடி கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். மேலும் என்னை ஏமாற்றி பத்திரம், காசோலை வாங்கி வைத்துள்ளார். கந்து வட்டி மூலம் வட்டிக்கு மேல் வட்டி அதிகமாகி போனதால் அதனை கட்ட முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். ஆகவே எனது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர்க்காக இந்த ஆடியோ பதிவை வெளியிடுகிறேன். கந்துவட்டி கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. பொரசக்குறிச்சியை சேர்ந்தவரால் மன உளைச்சல் ஏற்பட்டது. நான் வேலை பார்க்கும் நிறுவன உரிமையாளரும் தொழில் ரீதியாக தொல்லை செய்தார். அதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. விஷம் குடித்து 1½ மணி நேரம் ஆகிறது. நான் தற்போது தென்கீரனூர் ஏரிக்கரை அருகில் பைக்கை நிறுத்திவிட்டு, அங்குள்ள கிணற்றில் குதிக்கப் போகிறேன். என் அம்மாவையும், தங்கையையும் காப்பாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு மேற்கண்ட ஆடியோ பதிவில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தினேசின் தாய் சித்ரா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தற்கொலை செய்து கொண்ட தினேஷ் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).