மது குடித்து தகராறு செய்த கணவன்: கழுத்தை நெரித்து கொன்ற மனைவி - நடந்தது என்ன?
ஒசூரில் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி : கைது செய்து போலீசார் விசாரணை
ஒசூரில் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி : கைது செய்து போலீசார் விசாரணை
கல் உடைக்கும் தொழிலாளி கோவிந்தராஜ்
ஒசூர் ராயக்கோட்டை சாலை பகுதி 10 ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வந்தவர் கல் உடைக்கும் தொழிலாளி கோவிந்தராஜ் (45) இவரது மனைவி நந்தினி (35) இவர் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கோகுல கிருஷ்ணன் (15) என்ற மகனும், தீபிகா (17) என்ற மகளும் உள்ளனர்.
உயிரிழந்த கோவிந்தராஜ்
கல் உடைக்கும் தொழிலாளியான கோவிந்தராஜ் மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் தினம்தோறும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு ஈடுபடுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. சமீப காலமாக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த கோவிந்தராஜ் வீட்டில் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு குடிப்பதற்கு பணம் கேட்டு வந்துள்ளார் இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு வழக்கம் போல குடிபோதையில் வீட்டிற்கு சென்ற கோவிந்தராஜ் வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி நந்தினி அவரை எதிர்த்து சண்டை போட்டு கழுத்தை நெறித்துள்ளார். இதில் மூச்சு திணறி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நந்தினி தனது வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் தனது கணவர் படுக்கையில் பேச்சு மூச்சு இன்றி கிடக்கிறார் எனக்கூறியுள்ளார் அருகில் வசிப்பவர்களும் அங்கு சென்று பார்த்து அவரை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே இறந்த கோவிந்தராஜ்
மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஒசூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நந்தினி இடம் காவல்துறை விசாரணை
கோவிந்தராஜ் உயிரிழப்பு குறித்து அவரது மனைவி நந்தினியிடம் ஒசூர் நகர போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். அதே நேரத்தில் மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் கோவிந்தராஜ் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என்பது உறுதியான நிலையில் போலீசார் நந்தினியிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், குடித்துவிட்டு மது போதையில் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த கணவனை கழுத்தை நெரித்து கொன்றதாக கூறி உள்ளார். இதனையடுத்து போலீசார் நந்தினியை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட கூர்க்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் வேலைக்காக ஒசூரில் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் ஒசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது