100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன்! ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்!
மோசடி வழக்கில் கைதாகி கர்நாடக சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவாகியுள்ள நிலையில், தங்கத்தில் குளித்த அவர் இன்னும் சில காலம் இரும்புக் கம்பிகளுடன் தான் சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் போலும்!
அட இவருக்கு கழுத்துதான் வலிக்குமா இல்லையே பா.. என்று பார்த்தவுடன் ஒரு கேள்வி எழும் அளவுக்கு நடமாடும் நகைக்கடையாக உலா வருபவர் ஹரிநாடார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட இவர் நெல்லை மாவட்ட ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார். இவரது கட்சியின் பெயர் பனங்காட்டுப் படை. பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவித்துக் கொண்டார்.
இப்படி நகைகளுக்காகவும், அரசியல் கோமாலித்தனங்களுக்காகவும் அறியப்பட்ட ஹரிநாடார் தற்போது மோசடிப்புகாரில் சிக்கியிருக்கிறார். ஏற்கெனவே, 16 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் ஹரி நாடார் சிறையில் இருக்கிறார். இப்போது மேலும் ஒரு மோசடிப் புகார் அவர் மீது எழுந்திருக்கிறது.
குஜராத், கேரளாவரை நீளும் குற்றச்சாட்டுகள்..
குஜராத் மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவர் ஹரிநாடார் மீது மோசடிப் புகார் கூறியுள்ளனர். அதில், ஹரி தங்களுக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறிவிட்டு கமிஷனை மட்டுமே பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளார். ரூ.100 கோடி கடன் பெற்றுத்தர ரூ.1.5 கோடி கமிஷன் என்ற அடிப்படையில் ஹரி கமிஷன் பெற்றார். ஆனால், கடனை இதுவரை பெற்றுத்தரவில்லை என்பதே குஜராத்தைச் சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பஷீர் ஆகிய இருவரும் இணைந்து அளித்துள்ள புகார். இவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து பலசரக்கு ஏற்றுமதி தொழில் நடத்துகின்றன. அரபு நாடுகளுக்கு இந்திய வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பலசரக்குப் பொருட்களையும் ஏற்றுமதி செய்கின்றனர். இவர்களை ஹரிநாடாருக்கு பெங்களூருவைச் சேர்ந்த முகமது அலி என்பவரும், நெல்லையை சேர்ந்த அருள்தாஸ் என்பவரும் அறிமுகப்படுத்திவைத்துள்ளனர். ஹரிநாடாரும் தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்.
6 சதவீதம் வட்டி,.. பெருந்தொகை..
இஸ்மாயில், பஷீரை வசமாக வளைத்துப்போட எண்ணினாரோ என்னவோ, அவர்களிடம் ஹரிநாடார் தன்னை கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தின் ஆசியா நாடுகளுக்கான நிர்வாகி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிக அளவில் கடன் பெற்றுத் தருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஒருசில ஆவணங்களையும் காட்டி அதிரடி சரவெடிப் பேச்சுக்களால் அப்படியே அவர்கள் இருவரையும் மயக்கியிருக்கிறார். அப்புறம் என்ன அந்த நபர்களும், பெருந்தொகை கனவில் ஹரி நாடார் கேட்ட கமிஷனை அங்கே புரட்டி, இங்கே புரட்டி என மூன்று தவணைகளில் கொடுத்திருக்கின்றனர்.
Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி
எது சாக்கு; தேர்தல் சாக்கு..
தொழிலதிபர்கள் இருவரும் பணத்தைக் கொடுத்துவிட்டு கடனுக்காக காத்துக்கொண்டிருந்தனர். காத்திருப்பு நீளவே ஹரிநாடாரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போதெல்லாம், ஐ யெம் ஸோ பிஸி.. என்று தேர்தல் மும்முரம் போல் சீன் போட்டிருக்கிறார் ஹரி. தேர்தல் முடியட்டும் எல்லாம் சரியாகிவிடும் என்று தெம்பும் கொடுத்திருக்கிறார். தொழிலதிபர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் காத்திருப்பு வளையத்துக்குள் சென்றுவிட்டனர். ஒருவழியாக ஹரிநாடார் திருவனந்தபுரம் சென்றார். அங்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் வங்கிக் கடன் ஒப்பந்த பதிவுக்கான பத்திரப்பதிவு நடக்கும்போது ஹரிநாடார் கொண்டு வந்த பத்திரங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது. சுதாரித்துக் கொண்ட இஸ்மாயிலும் பஷீரும் எங்களுக்கு கடனே வேணாம் சாமி, நாங்க கொடுத்த கமிஷன் தொகையை மட்டும் திருப்பிக் கொடுங்கள் எனக் கதறியுள்ளனர். சரி, சரியென்று சொல்லிவிட்டு ஊருக்குத் திரும்பிய ஹரிநாடாரின் மொபைல் ஃபோன் இஸ்மாயிலுக்கும், பஷீருக்கும் மட்டும் தொடர்பு எல்லைக்கு வெளியில் போய்விட்டது.
இந்நிலையில், தொழில் அதிபர் பஷீர் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். தங்களிடமிருந்து ஹரிநாடார் ஏமாற்றிய ரூபாய் 1.5 கோடி பணத்தை மீட்டுத் தருமாறும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். வங்கிக்கடன் மோசடி வழக்கில் கைதாகி கர்நாடக சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவாகியுள்ள நிலையில், தங்கத்தில் குளித்த அவர் இன்னும் சில காலம் இரும்புக் கம்பிகளுடனே தான் சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் போல..
மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!