Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி
"போராட்டம் நடத்துவது ஒன்றும் தீவிரவாதச் செயல் அல்ல, ஆகையால் அது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகாது.." டெல்லி உயர் நீதிமன்றம் தான் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடந்த ஆண்டு மாணவர் சங்கத் தலைவர்களான ஆசிஃப் இக்பால் தான்ஹா, நடாஷா நார்வால், தேவகங்கா கலிட்டா ஆகியோர் போராட்டங்களை ஒருங்கிணைத்து ஏற்று நடத்தினார். இந்தப் போராட்டங்கள் தான் டெல்லியிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் வன்முறை பரவுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறி இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
டெல்லி போலீஸார் இந்த மாணவர்கள் மீது 'பெரும் சதி' வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சித்தார்த் மிருதுள், அனூப் ஜெய்ராம் பம்பானி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
நீதிபதிகள் கூறியவதாவது: மாணவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ஆராயும் போது அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 15,17.18 ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தமைக்கு எந்த முகாந்தரமும் இல்லை எனத் தெரிகிறது. ஆகையால் கிரிமினல் சட்டங்களின் படி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க எந்தத் தடையும் இல்லை. என்று கூறினர்.
ஓராண்டாக திகார் சிறையில்..
இந்த மூன்று மாணவர்களும் கடந்த ஓராண்டாக டெல்லி திகார் சிறையில் வாடுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட இவர்களுக்கு இடைக்கால ஜாமீன் நிவாரணம் கூட கிடைக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவரான மஹாவீர் நார்வாலின் தந்தை கடந்த மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு மட்டும் மூன்றுவாரம் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!
போராட்டம் என்பது உரிமை சட்டவிரோதச் செயல் அல்ல..
மூன்று மாணவர்களுக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், இந்த நீதிமன்றம் தன்ஹா, நர்வால், கலிட்டாவுக்கு ஜாமீன் வழங்குகிறது. போராட்டம் என்பது குடிமக்களின் உரிமை. அமைதியான போராட்டங்களை தீவிரவாதச் செயலாகப் பாவித்து அதனை சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரக் கூடாது. சட்டப்பிரிவுகள் 15, 17, 18ன் கீழ் சுட்டிகாட்டப்பட்டுள்ள குற்றங்களைப் புரிந்திருந்தால் மட்டுமே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர ஆதாயத்துக்காக வழக்குகளை ஜோடிக்கக்கூடாது என்றார்.
அதன்படி பார்த்தால் இந்த மூன்று மாணவர்கள் மீதும் சுட்டிக்காட்டிச் சொல்லும்படி எவ்வித குற்றங்களும் குற்றப்பத்திரிகையில் நிரூபிக்கப்படவில்லை. மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்களைத் திரட்டி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் என்றே குறிப்பிட்டிருக்கிறது.
இது எப்படி, சட்டவிரோதச் செயலாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் தன்ஹா என்ற நபர் ஒரு சிம் கார்டை மற்றொரு நபருக்குக் கொடுத்துள்ளார். அந்த நபர் அந்த சிம்கார்டை பயன்படுத்தி போராட்டத்துக்கு அழைப்புவிடுத்து பலருக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இதுதவிர வேறு குற்றத்தை இந்த நீதிமன்றத்தால் காண முடியவில்லை. அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை அலங்கார வார்த்தைகளால் குற்றத்தை விளக்குவதாக் இருக்கின்றனவே மாணவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்படக்கூடியவை அல்ல. மாணவர்கள் அமைப்பும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் அல்ல.
இந்தப் போராட்டம் அமைதியானப் போராடத்தைத் தாண்டியிருந்தாலும் கூட அது அரசியல் சாசனம் அனுமதிக்கும் அளவுக்கே உக்கிரமாக இருந்ததால், இதனை சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கூடிய குற்றமாகக் கருத முடியாது.
தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நடவடிக்கைகளுக்கே பொருந்தும். ஆனால், இந்த மாணவர்கள் மீதான குற்றச்சாட்டு பொருத்தமற்றது. சாதாரண மக்களின் மீது இத்தகைய கடுமையான சட்டங்களை காவல்துறையினர் ஏவ முயற்சிப்பது, இந்தச் சட்டம் இயற்றப்பட்டதற்கான காரணத்தையே சிதைப்பதாக அமைந்துவிடும். மேலும், பெரும் பலம் வாய்ந்த சட்டங்களை சிறு குற்றங்களின் மீது மடைமாற்றினால் அது அந்த சட்டத்தின் வலிமையை நீர்த்துப் போகச் செய்துவிடும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Director Saran Birthday: காதலில் விழுந்தவர்கள் கடக்க முடியாத சரணின் டாப் 5 சாங்ஸ்!