Crime: நெல்லையில் 9 மூட்டைகளில் குட்கா மற்றும் 400 லிட்டர் வெள்ளை மண்ணெண்ணெய் பறிமுதல்.. இருவர் கைது..
இதில் தொடர்புடையவர்கள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வாலகுரு நவ்வலடி பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது..
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரி கோவில் பகுதியில் வந்த ஒரு காரை மறித்து அதை சோதனை செய்தனர். அப்போது ஒரு மூட்டையில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் திசையன் விளை அருகே உள்ள காளிகுமாரபுரத்தை சேர்ந்த வாலகுரு ( வயது 37) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் திவீர விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் விற்பனைக்காக மற்றொரு இடத்தில் குட்காவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் கோடவிளை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 8 மூட்டைகளில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 9 குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் வாலகுருவை கைது செய்தனர். இதன் மொத்த எடை 169 கிலோ ஆகும். தொடர்ந்து இவர் எங்கிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்தார். யாரிடம் விற்பனை செய்வதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தார். இதில் தொடர்புடையவர்கள் யார்? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வாலகுரு நவ்வலடி பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது..
இதேபோல் இன்று அதிகாலை ராதாபுரம் மீன்வளத்துறை இயக்குநர் மோகன்குமார் தலைமையிலான போலீசார் 5.40 மணியளவில் உவரி ஊரில் இருந்து ஓர் ஆட்டோ வந்ததை தடுத்து ஆய்வு செய்தனர், ஆய்வு செய்ததில் மீனவர்களின் விசைப்படகுகளுக்கு தமிழக மீன்வளத்துறையின் சார்பில் மானியமாக வழங்கும் 400 லிட்டர் வெள்ளை மண்ணெண்ணெயை திருச்செந்தூருக்கு முறைகேடாக கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த அவர்கள் உவரி காவல்நிலையத்தில் ஆட்டோவை ஒப்படைத்தனர். மேலும் ஆட்டோவை ஓட்டிச்சென்ற திருச்செந்தூரைச் சேர்ந்த வள்ளிராஜா (42) என்பவரை கைது செய்து ஆட்டோவில் இருந்த 400 லிட்டர் வெள்ளை மண்ணெண்ணெயை டிரம்மை மீன்வளத்துறையினர் பறிமுதல் சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்