மேலும் அறிய
தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது; நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!
‛யமகா முருகன்’ மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்காப்புக்காக வெடிகுண்டு தயாரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டு
தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் பால கார்த்திக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சுரேஷ் என்பவருடன் இணைந்து "பாரத மக்கள் மருந்தகம்" நடத்தி வருகிறார். சுரேஷூக்கும், வியாபார ரீதியாக நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 1-ந்தேதி பணம் பறிக்கும் நோக்கில் சுரேஷ்பாபு தன் கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து தூத்துக்குடியில் பாலகார்த்திக் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது, சுரேஷ்பாபுடன் வந்தவர்கள் மதுரை சிறப்பு பிரிவு போலீஸ் எனக்கூறி பாலகார்த்திக் மனைவி சித்ரகலா கழுத்தில் கிடந்த 5.50 பவுன் நகையையும், செல்போனையும் பறித்ததுடன் சுரேஷை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சித்ரகலா மத்திய பாகம் போலீசில் அளித்த புகாரின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் சித்ரகலாவிடம் நகையை பறித்து சென்றது சுரேஷ்பாபு(வயது 30), நெல்லையை சேர்ந்த சரவணன்(39), சதாம் உசேன்(29), சென்னை தண்டலத்தை சேர்ந்த வீரமணிகண்டன்(31) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய கார், நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.


பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சித்ரகலாவிடம் இன்று நேரில் வழங்கினார். தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சரண்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாளமுத்துநகர் கோமஸ்புரம் பகுதியில் சிலர் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற போது அங்கு இருந்த 4 பேர் தப்பி ஓடினர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி ஒரு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தாளமுத்துநகர் போலீசார் யமகா முருகன், பிலிப்ஸ், முத்து, ஆனந்த் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். பின்னர் வெடிகுண்டு வைத்து இருந்ததாக யமகா முருகன், ஜான்சன் பெலிக்ஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்களில் 4 பேர் கைது செய்யபப்பட்டுள்ளனர். தலைமறைவான மற்றொரு நபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோல் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக போலீசார் ரோந்து மேற்கொள்கையில் சந்தேகத்தின்பேரில் ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக யமகா முருகன், ஜான்சன் பெலிக்ஸ் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் யமகா முருகன் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்காப்புக்காக வெடிகுண்டுகள் தயாரித்து வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் 155 கஞ்சா வழக்குகள் போடப்பட்டு 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்ற 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 86 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருபவர்களை தடுப்பது மரைன் போலீசார், கடலோர காவல்படை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரின் கூட்டு முயற்சியால் செய்யக்கூடியது. இதற்கான எல்லா முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
லைப்ஸ்டைல்





















