"அடிக்கடி RTI ல தகவலா கேட்குற" : அடி ஆட்கள் வைத்து மிளகாய் பொடி தூவி தாக்குதல்.. சிசிடிவியால் சிக்கிய விகேபுரம் தலையாரி
"வி.கே.புரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக தாக்கி மிரட்டல் விடுத்த தலையாரி உட்பட 7 பேர் கைது"
நெல்லை மாவட்டம் அனவன்குடியிருப்பை சேர்ந்தவர் பால்ராஜ்(38), கடந்த 02.02.2022 அன்று பால்ராஜும் அவரது உறவினர் இராமகிருஷ்ணன் என்பவரும், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் பால்ராஜை தாக்கியும், பின்னால் அமர்ந்து வந்த இராமகிருஷ்ணன் மீது மிளகாய் பொடியை தூவியும் தாக்கி விட்டு பின்னர் அவர்களிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு பால்ராஜை என்பவரை மிரட்டி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பால்ராஜ் வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வர சென்று உள்ளது, இச்சம்பவம் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், அறிவுரைப்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு, அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், மற்றும் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி, தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததோடு குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி காவல்துறைக்கு மாவட்ட SP உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பவ இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வந்தனர். மேலும் சந்தேகப்படும் படியான இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடந்தினர். அப்போது முக்கூடலை சேர்ந்த இமானுவேல் ஞான பிரவீன்(19), என்பவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் பால்ராஜை தாக்கியதிற்கு அரசு அதிகாரி மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை வைத்தார். அப்போது விக்கிரமசிங்கபுரத்தில் தலையாரியாக பணியாற்றி வரும் அடைச்சாணியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்பவரை பற்றி பால்ராஜ் அடிக்கடி RTI மூலம் தகவல் கேட்டு வந்து உள்ளார். இதனால் பால்ராஜுக்கும் தலையாரி முத்துக்குமாருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் தலையாரி முத்துக்குமார் தனக்கு தெரிந்த நபர்களை கொண்டு அடியாட்களை தயார் செய்து பால்ராஜை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முத்துக்குமார், அம்பை ஊர்க்காடை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40), நத்தன்தட்டையை சேர்ந்த கதிர்வேல் (27), முக்கூடலை சேர்ந்த இம்மானுவேல் ஞான பிரவீன்(19), சுப்பிரமணியபுரம் பொத்தையை சேர்ந்த சுபிஷ் @ சுரேஷ், பத்தமடையை சேர்ந்த வேல்துரை @ பார்த்திபன் (26), மற்றும் பாப்பாகுடியைச் சேர்ந்த மகேஷ்(31) ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தலையாரி முத்துக்குமார் என்பவர் தனது அரசு பதவியை மக்களிடம் தவறாக பயன்படுத்தி பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பலரில் ஒருவரான பால்ராஜ் அவர் அரசு பணியில் செய்யும் முறைகேடுகளை அம்பலப்படுத்த RTI மூலம் தகவல்கள் திரட்டி வந்துள்ளதால் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அதிகாரியாக பொறுப்பில் உள்ள ஒரு நபர் தன் மீது உள்ள குற்றச்சாட்டை வெளியே தெரியவிடாமல் மறைப்பதற்காக அடி ஆட்களை வைத்து நடத்திய நாடகத்தில் சிசிடிவி பதிவால் சிக்கி கொண்டு கம்பி எண்ணி வருவது குறிப்பிட்டத்தக்கது