கட்டட மேற்பார்வையாளர் கொலை: தலைமறைவாக இருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் கைது..!
பெரும்பாக்கத்தில் கட்டிட மேற்பார்வையாளரை கொலை செய்து தலைமறைவாக இருந்த வடமாநிலத்தவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நடைபெறும் கட்டுமான பணிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு சென்னை பெரும்பாக்கத்திலும் நடைபெற்று வந்த கட்டிட வேலையில் வடமாநிலத்தவர்கள் வேலை பார்தது வந்துள்ளனர். அவர்களில் வேலை செய்யும்போது சாப்பாட்டிற்கு சரியாக பணம் தராத ஆத்திரத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளரான உமேஷ் (வயது 22) என்பவரை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சக தொழிலாளர்களான சிவம்நாயக் (26), பிஜய் நாயக்(24), ஜோரா முண்டா (25) சஞ்சய் குவாலா(21) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜாமீனில் வந்த அவர்கள் 4 பேரும் கடந்த 2018ம் ஆண்டு முதல் தலைமறைவாகிவிட்டனர். பின்னர், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த காவல்துறை அதிகாரிகள் அசாம் மாநிலத்தில் பிஜய் நாயக்கும், ரோஜா முண்டாவும் பதுங்கியிருப்பதாக தகவலறிந்துள்ளனர். இதையடுத்து, அசாம் சென்ற தமிழக காவல்துறையினர் பிஜய் நாயக் மற்றும் ஜோரா முண்டாவை கைது செய்தனர். மேலும், திருவள்ளூரில் பதுங்கியிருந்த எஞ்சிய குற்றவாளிகளான சஞ்சய் குவாலா மற்றும் சிவம் நாயக் இருவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் குமார் மேற்பார்வையில் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர் தேஷ் முஸ்தாக் ஆகியோர் தனிப்படைகளாக செயல்பட்டு இவர்கள் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி பாராட்டினார். சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெருநகரங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் இதுபோன்று அடிக்கடி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதையடுத்து, குற்றச்சம்பவங்ளில் ஈடுபடும் வடமாநிலத்தவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்