கழிவுநீர் குழாயை அடைத்த உறவுக்கார பெண்...மன உளைச்சலால் தீக்குளித்த வயதான தம்பதி..!
சசிகலாவுக்கும், ஜானகிராமனுக்கு சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. நல்ல உறவினர்களாக இருக்க வேண்டிய இவர்கள், சொத்து தகராறால் எதிராளிகள் போல் மாறிவிட்டனர்.
சென்னை அருகே உறவினர் பெண் ஒருவர், வீட்டின் கழிவுநீர் குழாயை அடைத்ததால், வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் சோழபுரம் சரஸ்வதி பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராமன். வயது 85. இவர் மனைவி மாரியம்மாள், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரின், வீட்டின் உறவினர் பெண்ணான சசிகலா என்பவர், கணவர் இறந்த நிலையில், தனது 10 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
சசிகலாவுக்கும், ஜானகிராமனுக்கு சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. நல்ல உறவினர்களாக இருக்க வேண்டிய இவர்கள், சொத்து தகராறால் எதிராளிகள்போல் மாறிவிட்டனர். இந்த சொத்து தகராறை மனதிலே வைத்துக்கொண்ட சசிகலா, சில தினங்களுக்கு முன்பு, ஜானகிராமன் வீட்டுக்கு செல்லும் கழிவு நீர் குழாய் இணைப்பை அடைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கழிநீர் வெளியேற முடியாமல் ஜானகிராமன் வீட்டு வளாகத்தில் தேங்கியுள்ளது. கழிவுநீர் தேங்கியதால், துர்நாற்றம் வீசி கடும் அவதிக்குள்ளாகினர் ஜானகிராமன் குடும்பத்தினர். இதுதொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜானகிராமனும், அவரது மனைவியும் சசிகலாவின் வீட்டுக்கு பின்புறம் இருந்த பயன்படுத்தாத பாத்ரூமில் திடீரென்று தீக்குளித்தனர். அவர்களில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மகன், மருகள், இருவர் மீதும் பற்றி எரித்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ அவர்கள் உடல் முழுவதும் பரவியதால், உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஜானகிராமன் வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனது வீட்டு கழிவு நீர் இணைப்பை அடைக்க கூடாது எனக்கூறி, சசிகலா அடைத்துவிட்டதாகவும், இதனால், மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். மேலும், தங்களின் சாவுக்கு சசிகலாதான் காரணம் என்றும், அவருக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் எழுதியிருந்தனர். இந்தக் கடிதத்தை கொண்டு சசிகலாவை கைது செய்த போலீசார், அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
கழிவுநீர் குழாயை அடைத்ததால் ஏற்பட்ட தகராறில், வயதான தம்பதி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044-2464000 State suicide prevention helpline – 104 ,iCall Pychosocial helpline – 022-25521111
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்