வாட்ஸ்ஆப் குருப் அமைத்து கொள்ளையடித்த கிறிஸ்தவ மதபோதகர் மற்றும் கோயில் பூசாரி உட்பட 8பேர் கைது
திண்டிவனம், மயிலம் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கிறிஸ்தவ மதபோதகர், கோவில் பூசாரி உள்ளிட்ட 8 பேர் கைது- 26 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு கார் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெகன். காவல் பயிற்சி மைய உரிமையாளரான இவர், தனது வீட்டை பூட்டி விட்டு கல்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த 2 சவரன் நகை ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் மடிக் கணினி ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் ஜெகனுக்கு சொந்தமான மாடி வீட்டில் வசித்து வந்த ரமேஷின் என்பவரின் வீட்டிலும் 20 சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கம், ஒரு மடிக்கணினியை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதுதவிர திண்டிவனம் பகுதியில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து ஒரு கும்பல் நகைகளையும் பறித்து வந்ததுடன் கோவில்களிலும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறின.
திண்டிவனத்தில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் மயிலம் காவல் ஆய்வாளர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். இந்த தனிப்படையினர், மயிலம் பொறியியல் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்த நிலையில் கார் நிற்காமல், போலீசார் மீது மோதுவதுபோல் வந்து மின்னல் வேகத்தில் சென்றது.
உடனே போலீசார் தங்களது வாகனத்தில் துரத்தி சென்று, அந்த காரை மடக்கினர். காரில் இருந்த 8 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம் அயன் சிங்கம்பட்டி அம்மைவரத்தை சேர்ந்த ராஜா மகன் மகேந்திரன் (39), நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த மைதீன் லப்பை மகன் புரோஸ்கான்யாசர் (27), நெல்லை ராஜவள்ளிபுரம் இந்திரா நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் மதிபாலன் (27), விக்கிரவாண்டி தென்பேர் மாதா கோவில் தெருவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஏழுமலை (47), திருப்பூர் பள்ளிபாளையம் அவிநாசியை சேர்ந்த கிட்டுசாமி மகன் ஆனந்தகுமார் (23), அவிநாசி திருமுருகன் பூண்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய்பாண்டியன் (20), கீழ்மயிலத்தை சேர்ந்த நாகாத்தம்மன் புத்துகோவில் பூசாரி சக்திவேல் (47), திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் மகன் குமார் (38) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் 8 பேரும் வாட்ஸ்-அப்பில் குழு உருவாக்கி திண்டிவனம், மயிலம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. முதலில் இவர்கள் கோவில்களில் உள்ள இரிடியத்தை திருடி விற்பனை செய்து வந்துள்ளனர். தற்போது அதில் அதிக வருமானம் கிடைக்காததால், கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மகேந்திரன் உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 26 சவரன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், மற்றும் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.