வீரளூர் கலவரக்காரர்களை கண்டறிய கிராமத்திலேயே துணை காவல் நிலையம் அமைப்பு - டிஎஸ்பி, தாசில்தார் பணியிடமாற்றம்
’’பொன்னேரி டிஎஸ்பியாக பணிபுரிந்த குணசேகரன் போளூர் டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே கலசபாக்கம் ஆய்வாளராகவும், போளூர் டிஎஸ்பியாகவும் பணியாற்றியவர்’’
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் மயானபாதை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கலவரம் நடைப்பெற்றது. இதில் ஒரு பிரிவினர் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகள் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 21 நபர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் இருந்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹால்டர், வீரளூர் கிராமத்திற்கு வருகை புரிந்து விசாரணை நடத்தினார்.
அப்போது ஒரு பிரிவினர், வன்முறையில் ஈடுபட்ட 250 நபரை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தனர். இதையடுத்து அருண்ஹால்டர், காவல்துறை ஐஜியிடம் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வீரளூர், மேல்சோழங்குப்பம் கிராமங்களில் வீடு வீடாக சென்று கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் 3 நபரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வீரலூர் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் தலைமறை வாகிவிட்டனர். இது பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பெண்களால் வெளியே வர முடியாத சூழல் உருவாகி உள்ளது. அந்த கிராமத்தில் தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவலதுறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வீரளூரில் நடந்த கலவரத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி, போளூர் டிஎஸ்பி அறிவழகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம். பொன்னேரி டிஎஸ்பியாக பணிபுரிந்த குணசேகரன் போளூர் டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே கலசபாக்கம் ஆய்வாளராகவும், போளூர் டிஎஸ்பியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கலசபாக்கம் தாசில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருவண்ணாமலை தனி தாசில் தாராக (குடிமை பொருள்) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திருவண்ணாமலை தனி தாசில்தாராக (குடிமை பொருள்) பணிபுரிந்து வந்த உதயகுமார் கலசபாக்கம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, வீரலூர் கலவரம் தொடர்பாக மேலும் பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், அந்த கிராமத்தில் சுமூகமான சூழ்நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உயர் அதிகாரிகள் தொடர்ந்து வீரளூரில் முகாமிட்டுள்ளனர்.