sexual abuse : ஜிம்மில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது, சிறுவன் தப்பியோட்டம்
பாதிக்கப்பட்டவரின் கெளரவத்தையும், வேண்டுதலையும் சற்றும் அங்கீகரிக்காமல் கொடுமைபடுத்தியுள்ளனர்
தேசிய தலைநகர் டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம் கோச், பாதிக்கப்பட்ட பெண் பணி புரியும் நிறுவனத்தின் முதலாளி ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சிறுவனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி புத் விகார் நகரின் வெளிப்புறத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட பெண் பணியாற்றி வருகிறார். நேற்று பணி முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த பொழுதில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவருடைய முதலாளி நண்பரின் உடற்பயிற்சி நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். பயிற்சி நிலையத்தை சுத்தம் செய்திடக் கோரியதால், பாதிக்கப்பட்ட பெண்ணும் உடனடியாக அங்கு சென்றார். பயிற்சி நிலையத்தில் வருவதற்கு முன்பாகவே, நிறுவனத்தின் முதலாளி, ஜிம் கோச் மற்றும் 17 வயதுக்குட்பட்ட சிறுவன் அங்கு இருந்துள்ளனர்.
பின்னர், அனைவரும் கூட்டாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் கெளரவத்தையும், வேண்டுதலையும் சற்றும் அங்கீகரிக்காமல் கொடுமைபடுத்தியுள்ளனர். மேலும், தகவலை காவல்துறைக்கு தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இருப்பினும், தனது சட்ட உரிமைகள் குறித்தும், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும் விழிப்புணர்வு கொண்ட பாதிக்கப்பட்டவர், தனது கணவருடன் சென்று காவல்துறையில் புகார் மனுவை அளித்தார். குற்றம் புரிந்தவர் பற்றியும், குற்றம் பற்றியும் தனக்கு தெரிந்த அத்தனை தகவல்களையும் முழுமையாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் விரிவான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
சட்டத்தை மீறும் சிறார்கள் மற்றும் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படுவோருக்காக, இளம் சிறார் நீதி (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தை மத்திய அரசு இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுப்பதற்காக குற்றவியல் (திருத்த) சட்டம் 2013 இயற்றப்பட்டது. மேலும், 12 வயதுக்குட்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளுக்காக குற்றவியல் (திருத்த) சட்டம் 2018 நிறைவேற்றப்பட்டது. இரண்டு மாதங்களில் காவல்துறையின் விசாரணை முடித்து, இரண்டு மாதங்களில் நீதிமன்ற விசாரணையையும் முடிப்பதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது.
இருந்தாலும், பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்பட்ட விகிதங்கள் குறைந்து காணப்படுகிறது. எனவே, போதிய சட்டநெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி குற்றவாளிகள் தப்பிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்